சயின்சை பிசினசாக செய்து சாதிப்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் அறிவியலையும் காசாக்கும் கலையை அறிந்து வைத்திருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் ஞாறோடு பகுதியைச் சேர்ந்த வி.என்.அரிகரன். குருந்தன்கோடு அருகே சரல் பகுதியில் பயோமேட்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (Biomeitez Research and Development Pvt Ltd) நிறுவனத்தை நடத்தி, அறிவியல் ஆற்றலால் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார் இவர்.
பயோமேட்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் கம்பெனியின் சி.இ.ஓ மற்றும் லீட் ரிசர்ச் சயண்டிஸ்ட்-ஆக முனைவர் வி.என். அரிகரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். உற்சாகமாக பேசத் தொடங்கினார் அவர்...
``நான் 2010-ல் எம்.எஸ்.சி முடித்துவிட்டு சென்னையில டெல் கம்பெனியில ஐ.டி ஃபீல்டுல வேலைக்குப் போனேன். சீனியர் ரிசர்ச் அசோசியேட்டிங்கிற போஸ்டிங்ல அங்க வேலை செய்துகிட்டிருந்தேன். அப்ப 20,000-க்கும் மேல சம்பளம் கொடுத்தாங்க. ஏ.சி கார்ல கூட்டிகிட்டுப் போவாங்க, ஏ.சி அறையில கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து வேலை செய்துகிட்டிருந்தேன்.
வாரம் 5 நாள் வேலை. தினமும் 7 மணி நேரம் அலுவலகத்தில இருந்தால் போதும். ஆனா, வேலைக்கு சேர்ந்த மூனாவது மாசமே அது எனக்குத் தகுந்த வேலை அது இல்லைன்னு தோணிச்சுது. தினமும் ஒரே கீபோர்டை ஒரே மாதிரி தட்டிகிட்டு இருந்ததுனால என்னோட அறிவு பிளாங்க் ஆனதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. அதனால, வேலையை விட்டுவிட்டு உடனே ஊருக்கு வந்தேன்.
என்ன செய்வதுன்னு யோசித்தேன். அந்த சமயத்தில, செல்போனில் ஃபாம்வில்லே அப்பிடீங்கிற கேம் விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. அது, ஃபோனில் விவசாயம் செய்யும் விளையாட்டு. இரண்டு வாரம் விளையாடியபோதுதான் எதுக்கு செல்போனை நோண்டணும், நம்மகிட்டதான் நிலம் இருக்கே அதில நேரடியா விவசாயம் செய்யலாமேன்னு வீட்டுக்கு தேவையான காய்கறிகளைப் பயிரிட்டேன்.
அடுத்ததா 2012-ல மத்திய அரசின் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி டிப்பர்ட்மெண்டின் பயோ டீசல் திட்டம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். உண்ண முடியாத விதைகளில இருந்து பயோ டீசல் தயாரிக்கிறது சம்பந்தமாக ஆய்வு செய்தேன். அந்தத் திட்டத்தில் மாதம் 22,000 ரூபாய் சம்பளம் வந்தது.
அந்தத் திட்டத்தில வேலை செய்துகிட்டிருந்த சமயத்திலேயே பி.ஹெச்.டி-க்கு அப்ளை பண்ணினேன். அதில ஸ்தல விருக்ஷங்கள் பற்றி தலைப்பில், வில்வம் மரத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்தேன். வில்வத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வில்வத்துக்கும் என்ன வித்தியாசம், அதில் உள்ள மரபணுக்கள் பற்றியும் ஆய்வு செய்து 2015-ல் பி.ஹெச்.டி பட்டம் பெற்றேன்.
அதன்பிறகு 2017-ல் நூருல் இஸ்லாம் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். 24,000 ரூபாய் சம்பளம் கிடைத்தது. ஆனா, புதுசு புதுசா எதாவது செய்யனும்னு என் மனசில தோனிகிட்டே இருந்தது. அந்த சமயத்தில வெளிநாடுகளில வேலைக்கு போக நிறைய ஆஃபர் வந்தது. ஆனா, சொந்த ஊர்லயே பிசினஸ் செய்து சம்பாதிக்கணும்னு, வெற்றி பெறனும்ங்கிற எண்ணம் எனக்கு மேலோங்கி இருந்தது.
தினமும் ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப பண்ணுறது பிடிக்கல. எனக்குப் புதுசா எதையாவது கண்டுபிடிச்சுகிட்டே இருக்கிறது பிடிக்கும். தென் தமிழகத்தில் அறிவியல் ஆய்வுகளுக்காகவும், சயின்ஸ்ல பி.ஹெச்.டி புராஜெக்ட் செய்து கொடுக்குறதுக்கான மையம் குறிப்பிட்டு சொல்லும்படியா இல்லை. அதனால, சின்ன பட்ஜெட்டில் ஆழ்ந்த அறிவியல் ஆய்வு செய்ய முடிவு செய்தேன்.
பயாலஜி சைன்ஸ்ஸை கம்ப்யூட்டரில் அப்ளை செய்வதுதான் பயோ இன்பமேட்டிக்ஸ். இந்த நிறுவனத்தை முதலில் நாகர்கோவிலில் தொடங்கினேன். அதற்காக நான் என் நண்பர்கள் இரண்டு பேரை ஷேர் ஹோல்டராக சேர்த்துக் கொண்டேன். மூன்று பேருமாக ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அந்த மூன்று லட்சம் ரூபாய்ல நாகர்கோவில்ல ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி கம்பெனியை தொடங்கினோம். அதே ஆண்டு மே 10-ம் தேதி மினிஸ்ட்ரி ஆப்கார்பரேட்-டில் கம்பெனி ஆக்ட்ல பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக பதிவு பண்ணினோம். நான் இந்த கம்பெனியில நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வாக இருக்கிறேன். மற்ற ரெண்டுபேரும் ஷேர்ஹோல்டர்ஸ்-ஆக இருக்கிறாங்க.
கம்பெனிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க பிரைமினிஸ்டர் எம்ப்ளாய்மெண்ட் ஜெனரேசன் புரோகிராம் (PRIME MINISTER EMPLOYMENT GENERATION PROGRAM) (PMEPG) திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் வங்கியில லோன் வாங்கினேன். கம்பெனி தொடங்கும்போது இரண்டு பணியாளர்களை வேலைக்கு எடுத்தோம்.
தொடக்கத்தில ரெண்டு, மூணு புராஜெக்ட் வந்தது. அதை நல்லபடியா செய்துகொடுத்தோம். சைன்ஸ்-ல பாட்டனி, சுவாலஜி, பயோ டெக்னாலஜி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என எல்ல சப்ஜெக்ட்லயும் புராஜெக்ட் செய்து கொடுக்கிறோம். ரெண்டு சப்ஜெக்ட் சேர்த்தும் புராஜெக்ட் செய்துகொடுத்தோம். ஏற்கெனவே இருந்த வீட்டுல வசதி பத்தாததுனால குருந்தன்கோடு பக்கத்தில சரல் பகுதியில இருந்த எங்க அப்பா கட்டின புதிய கட்டடத்தில கம்பெனியை மாற்றினோம். அப்பாவுக்கு வாடகை கொடுத்துக்கொண்டுதான் இந்த கம்பெனியை செயல்படுத்திக்கிட்டு இருக்கிறேன்" என கம்பெனி ஆரம்பித்த நிகழ்வுகளை விவரித்தவர் கம்பெனியின் வளர்ச்சிபறியும், லாபம் பற்றியும் பேசினார்.
"முதல் வருஷத்தை பிரேக் ஈவன் பாயிண்ட் எனச் சொல்லுவோம். அந்த ஆண்டு எங்களுக்கு லாபமும் நஷ்டமும் இல்லாமல் ஜீரோ நிலையில் இருந்தது. அந்த ஆண்டுதான் நிறைய உபகரணங்கள் வாங்கவேண்டியது இருந்தது, லோன் கட்டவேண்டியது இருந்தது. ஆண்டுக்கு 14 லட்சத்தில் தொடங்கிய டேர்னோவர், படிப்படியாக 18 லட்சம், 20 லட்சம்னு அதிகரிச்சது. சம்பளம், கெமிக்கல்ஸ்-க் கான செலவு எல்லாம் போக டேர்னோவர்ல 20% லாபம் கிடைத்தது.
முதல் மூன்று வருடம் வந்த லாபத்தை மீண்டும் இதே கம்பெனியில் முதலீடு செய்தோம். ஐந்து ஆண்டு செலுத்த வேண்டிய லோனை மூன்று வருஷத்திலேயே கட்டி முடிச்சிட்டேன். இடையில கொரோனா வந்தது. அந்த சமயத்தில எங்கபிசினஸ் சற்று பின்னடைவை நோக்கிபோகும் நிலை ஏற்பட்டது. அதனால, இயற்கை மூலிகையில சானிடைசர் தயாரிச்சு விற்பனை செய்து கொரோனா காலத்தை கடந்து வந்தோம்.
அதன் பிறகு படிப்படியா வளர்ந்தோம். இப்ப எங்க கம்பெனியில் 9 ஊழியர்கள் இருக்கிறாங்க. உபகரணங்கள், கெமிக்கல்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து கம்பெனியின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு வளர்ந்திருக்கு. இப்ப வருஷத்துக்கு 40 லட்சம் ரூபாய் டேர்னவர் ஆகுது. அதில கெமிக்கல் வாங்குறது, ஊழியர்களோட சம்பளம், எனக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம், கட்டட வாடகை எல்லாம் போக 50% அதாவது, சுமார் 20 லட்சம் ரூபாய் லாபமாக வரும்.
கம்பெனிக்கு ஆண்டுக்கு 25 சதவிகிதத்துக்கு குறையாமல் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எங்கள் கம்பெனியை ஆராய்ச்சி மையமாக மாற்ற திட்டமிட்டிருக் கிறோம். அதன்மூலம் பி.ஹெச்.டி மாணவர்கள் இங்கு பதிவு செய்து பல்கலைக்கழகத்தில் சமிட் செய்யும் வகையில் கொண்டுவர உள்ளோம். அறிவியலை வேறு ஒரு கோணத்தில் எளிமையாக்கி கொண்டுபோறதுதான் என் திட்டம். கைவசம் எப்போதுமே ஏழு முதல் எட்டு லட்சம் ருபாய்க்கான புராஜெக்டுகள் இருந்துகொண்டே இருக்கும்.
வெளியில உள்ள புராஜெக்ட்களை மட்டும் நம்பாம நாங்களே டி.எஸ்.டி, டி.பி.டி ஃபண்டிங் ஏஜென்ஸிகளிடம் இருந்து ஃபண்ட் வாங்குவதற்கு முயன்றுகிட்டிருக்கிறோம். டிப்பார்ட்மெண்ட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி, டிப்பார்மெண்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, சைன்ஸ் அண்ட் இன்ஜினியரிங் போர்ட் போன்றவை அறிவியல் வளர்ச்சிக்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் செயல்படுகின்றன. அதில் சமூகத்தில் தேவையான புராஜெக்ட்களை அப்ளை பண்ணி செய்துகொடுக்கலாம். தேவையான ஃபண்ட் அவர்களே கொடுப்பார்கள். அதற்காக அப்ளை செய்திருக்கிறோம். அதுவும் வந்தால் கம்பெனி வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். புதுமை, மக்களுக்கு நன்மை அளித்தல் போன்ற கண்டண்ட்களை எடுத்து பண்ண திட்டமிட்டுள்ளோம்" என்றவர் அறிவியலை பிசினசாக மாற்றியது பற்றி சொன்னார்.
"பொதுவா, சைன்ஸ்ஸை காசாக்கிறது, அதை பிசினசாக பண்ணுவது ரொம்ப கஷ்டம். வேலைகிடைக்காதுங்கிற எண்ணம் இருக்கிறதுனால ஊர்ல பசங்க சைன்ஸ் படிக்கிறது கம்மி. பெண்கள்தான் அதிகமா சைன்ஸ் படிப்பாங்க. எப்பிடித்தான் சைன்ஸ்ச காசாக்கிற-ன்னு என் நண்பர்கள் கேட்டாங்க. இங்கு அறிவுக்குத்தான் விலை. சி.ஏ படிச்சவங்க ஒரு கையெழுத்துக்கு ஐந்தாயிரத்தில இருந்து பத்தாயிரம் வரை கேட்பாங்க. அவங்க படித்ததுக்குத்தான் மதிப்பு.
இங்க புதுசா வேலைக்கு வரும் ஊழியர்களின் மதிப்பெண்ணை நான் பார்க்கமாட்டேன். அவங்களுடைய சிந்திக்கும் திறனை அடிப்படையாக வச்சுத்தான் வேலைக்கு எடுக்கிறோம். ஊழியர்கள் பிளாங்காகத்தான் வருவாங்க. அவங்களுக்குப் பயிற்சிகொடுத்து தயார் பண்ணுறதுக்கே இரண்டு மாசம் ஆகிடும். அவங்களையும் புதுசா கண்டுபிடிக்கிறது மாதிரி யோசிக்க வைப்பேன்.
கம்பெனிக்கு நாங்க விளம்பரம் செய்யுறது இல்ல. புராஜெக்ட் பண்ணி கொடுத்தவங்க சொல்லிச் சொல்லி புதிய மாணவர்கள் வந்ததுனால எங்க கம்பெனி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கு. ஊழியர்கள் வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வுடன் மைண்ட் ப்ரியா இருக்கும் வகையில சூழல் ஏற்படுத்தி இருக்கிறேன். அப்பத்தான் அவங்களால புதுசா யோசிக்க முடியும்.
ஆபீஸ் டைம் காலை 9.30 மணியில இருந்து மாலை 5.30 மணிவரை. ஆனால், அந்த டைமுக்கு வரணும்ணு கட்டாயம் இல்லை. அவங்க டைமுக்கு வந்து வேலை செய்யலாம். இப்ப கம்பெனி முழுவதும் உபகரணங்கள் இருக்கு. இன்னும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். புதுசா யோசிச்சு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடிம்ங்கிற நம்பிக்கை உள்ளவங்க அறிவியலை பிசினசாக பண்ணலாம்" என்றார்.
கலக்குங்க அரிகரன் ப்ரோ...!
from Latest news https://ift.tt/YVFuz3y
0 Comments