17 டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயைக் கண்டறிந்த Chat GPT... குணமடைந்து வரும் சிறுவன்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவான ChatGPT, உலகம் முழுவதும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியத்தோடு அதன் திறன்களால் மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. அது பயன்பாட்டிற்கு வந்த பின்னர், பல்வேறு துறைகளில் வெவ்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவத்துறையிலும் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் 4 வயது சிறுவனின் நோயை, 17 டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கண்டுபிடித்து பதிலளித்துள்ளதாக, அச்சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

பல் வலி | மாதிரிப்படம்

அமெரிக்காவைச் சேர்ந்த கர்ட்னி என்பவரின் நான்கு வயது மகன் அலெக்ஸ்; வளர்ச்சி குன்றிய இச்சிறுவன் கடுமையான பல் வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். அச்சிறுவனுக்கு, உணவுப்பொருள்களை மெல்ல ஆரம்பித்ததும் அவனுடைய கடைவாய்ப்பற்களில் மிகுந்த வலியை ஏற்பட்டு வந்துள்ளது.

சிறுவனை அவனின் அம்மா கர்ட்னி, பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காட்டியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் பலரும் அந்தச் சிறுவனுக்கு எந்த வகையான நோய் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்று கூறிவிட்டனர்.

பல் மருத்துவர்கள் பரிசோதித்து அதற்கான காரணம் என்ன என்பதை உறுதியாகக் கண்டறிந்து கூற முடியவில்லை. மாறாக ஒவ்வொரு மருத்துவரும் மற்ற மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மூச்சு விடுவதில் சிரமம், வளர்ச்சிக் குறைபாடு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவரை அணுகி உள்ளார். இறுதியாக இது தொற்றுநோயாக இருக்கலாம் எனக்கூறி, உடல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் அப்போது அலெக்ஸ், கடுமையான தலைவலியினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரைச் சந்தித்துள்ளார்.

சிகிச்சை

இவ்வாறாக மூன்று ஆண்டுகளில் 17 மருத்துவர்களிடம் சென்றும் சிறுவனுக்கான நோய் பாதிப்பு என்ன என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

இதனால் விரக்தியடைந்த சிறுவனின் அம்மா கர்ட்னி, இறுதியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி உதவியை நாடி உள்ளார். அதில் தன் மகனின் நோய்க்கான அறிகுறி மற்றும் இதுவரை மருத்துவர்களிடம் காட்டிய மருத்துவ அறிக்கைகள் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதையடுத்து, சிறுவனின் நோயை சாட் ஜிபிடி தொழில்நுட்பம் கண்டறிந்து கூறியுள்ளது. அதாவது சிறுவன் அலெக்ஸ் 'டெதர்ட் கார்டு சிண்ட்ரோம்' எனப்படும் அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.

பின்னர், சிறுவனை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் அழைத்துச் சென்று உள்ளார். மேலும் அலெக்சின் எம்.ஆர்.ஐ படங்களையும் காட்டியபோது, சிறுவனின் நோய்க்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அந்தச் சிறுவனுக்கு சில வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இப்போது குணமடைந்து வருகிறார்.

Chat GPT

செயற்கை நுண்ணறிவு மூலம் எல்லாவித நோய்களுக்கும் தீர்வு காண முற்படுவது என்பது, எல்லா நேரங்களிலும் கை கொடுக்காது. இது பேராபத்தில் கூட முடியக்கூடும். எனவே முறையாக மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதே நல்லது.



from Latest news https://ift.tt/guF7Sf3

Post a Comment

0 Comments