தங்களுக்குப் பிடித்த இடத்தில் இருந்து வேலை செய்வதையே பலரும் விரும்புகின்றனர். கோவிட் தொற்றுக்குப் பிறகான இந்த மாற்றம் அலுவலகங்களின் பணிச்சூழலையும் மாற்றி இருக்கிறது.
நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் மனநிலையை அறிந்து வீட்டில் இருந்து தங்களுக்குப் பிடித்த நேரத்தில் வேலை செய்வதற்கான அனுமதியை ஊழியர்களுக்கு அளித்திருக்கிறது. இதை டெக் உலகில் `ஹைப்ரிட் வேலை முறை’ (Hybrid work) என அழைக்கின்றனர்.
அட இது நல்லா இருக்கே எனப் பல நிறுவனங்களும் ஹைப்ரிட் வேலை முறையைப் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தில் ஊழியர்கள் மூன்று நாள்கள் மட்டும் அலுவலகத்தில் வந்து பணிபுரிய வேண்டும். வருடத்தில் ஒருமுறை `ஒர்க் ஃபர்ம் ஹோம்' எடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு மாதத்துக்கு வேலை செய்யலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறது.
இதேபோல ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி மாருதி, நெஸ்லே, பெப்சிகோ, டெக் மஹிந்திரா, மெக்கெய்ன், மொண்டலெஸ், ஏர்டெல், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அனைவருக்கும் அல்லது சில ஊழியர்களுக்கு மட்டும் ஹைப்ரிட் வேலை முறையைப் பின்பற்றுவதற்கான அனுமதியை அளித்திருக்கிறது.
இது குறித்து பணியாளர் சேவைகளை வழங்கும் நிறுவனமான Xpheno ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹைப்ரிட் வேலைகள் ஆகஸ்ட் மாதத்தில் 40 சதவிகிதம் அதிகரித்து 42,000 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹைப்ரிட் வேலைகளுக்கான வாய்ப்புகள் பெரும்பாலும் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் சென்னை முதலிய நகரங்களில் காணப்படுகின்றன. ஹைப்ரிட் வேலைகளை வழங்கும் முதல் ஐந்து இடங்களாக இவை இருக்கின்றன.
டெக் ஸ்டார்ட் அப், தொலைத்தொடர்பு, மென்பொருள் மேம்பாடு மற்றும் பேங்கிங் போன்றவை ஹைப்ரிட் வேலைகளை வழங்கும் முன்னணித் துறைகள். இத்துறைகளில் 38 சதவிகிதம் ஹைப்ரிட் வேலை வாய்ப்புகள் உள்ளன.
மாருதி சுஸூகி நிறுவனமும் உற்பத்தித் துறையில் வேலை செய்யாத ஊழியர்களை அவர்களின் பணியின் தன்மையைப் பொறுத்து வீட்டிலிருந்து பணி புரிய அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மாருதி சுஸூகியின் ஹெச்.ஆர், நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேஷ் உப்பல் கூறுகையில், ``இந்தக் கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஊழியர்களின் பணி வாழ்வு சமநிலையில் வைக்க உதவுகிறது. அதோடு ஊழியர்கள் பணியில் ஈடுபாடோடு இருப்பதோடு உற்பத்தித் திறனையும் மேம்படுத்த உதவியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்க பிடிக்குமா அல்லது வீட்டில் இருந்து பணிபுரிய பிடிக்குமா அல்லது கலந்து வேலை பார்க்க பிடிக்குமா?!
from Latest news https://ift.tt/1cTlu3J
0 Comments