`மகனின் `பதவி வேண்டாம்’ உரை; நெகிழ்ந்த தந்தை’ - மதுரை மாநாடு மூலம் வைகோ சொல்லும் சேதி என்ன?!

"தமிழ்ச் சமுதாயத்துக்காக  பெரியார், அண்ணா வழியில் 60 ஆண்டுகளாக உழைத்துவருகிறார். மத்திய அமைச்சர் பதவியை ஏற்க வாஜ்பாய், அத்வானி கட்டாயப்படுத்தியும் மறுத்தவர். அவர்மீதான அன்பினால்தான் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள். இதைப் பார்த்து, இன்று நிம்மதியாக உறங்கச் செல்வார்" என்று துரை வைகோ, தந்தை வைகோ குறித்துச் சிலிர்க்க,

துரை வைகோ

`` `நான் நினைத்ததை அப்படியே நீ பேசிட்டே’ என்பார் கலைஞர். அதுபோல நான் நினைத்ததை என் மகன் துரை வைகோ பேசியிருக்கிறான். `பதவி தேவை இல்லை’ என்று அவன் பேசியதைப் பார்த்து பெருமையாக இருக்கிறது..." என்று வைகோ நெகிழ, தந்தை-மகன் பாசத்தைத் தொண்டர்கள் பார்ப்பதற்காக நடத்தப்பட்டதுபோல மதுரை மதிமுக மாநாடு நடந்து முடிந்திருக்கிறது என முணுமுணுக்கிறார்கள் நிர்வாகிகள் சிலர்.

அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநாட்டை அறிவித்த வைகோ, எதிர்கால அரசியல், வருகிற தேர்தலில் எடுக்கவிருக்கும் கட்சியின் நிலைப்பாடு, இன்னும் பல அறிவிப்புகளை இந்த மாநாட்டில் அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்ததால், ம.தி.மு.க-வினர் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது குறித்து பெரிய அளவில் பேசாமல் துரை வைகோவை ஃபோகஸ் பண்ணும்விதமாகவே மாநாடு நடந்தது என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள் சிலர்.

துரை வைகோ

இது குறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க நிர்வாகிகள், "முதன்மைச் செயலாளரான துரை வைகோ கட்சியில் செயல்பட ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகளும், பல மாவட்டச் செயலாளர்களும் இன்னும் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி தானும் முன்புபோல் ஆக்டிவாக இல்லை என்று உணர்ந்த வைகோ, 30 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சியை அப்படியே மகனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அப்படியே துரை வைகோவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதி எம்.பி-யாக்கிவிட வேண்டும் என்றும் நினைத்திருப்பவர், அதற்கான அறிமுக விழாவாகவும், கட்சியை இனி முழுமையாக வழிநடத்தப்போகிறவர் துரை வைகோதான் என்பதை கட்சியிலுள்ள மற்ற நிர்வாகிகளும், தி.மு.க உள்ளிட்ட கட்சியினரும் அறிய வேண்டும் என்பதற்காகவும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பதாகவே தெரிகிறது.

தொழில் நிறுவனம் நடத்திவந்த துரை வைகோ, மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்சிக்குள் என்ட்ரி ஆனார். ஆனால், அவர் வருகை மூத்த நிர்வாகிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட ஐந்து மாவட்டச் செயலாளர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார்கள். ம.தி.மு.க-வை தி.மு.க-வோடு இணைக்க துரை வைகோ பேரம் பேசிவருகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்கள். கணேசமூர்த்தி, மல்லை சத்யா போன்றவர்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துவந்தார்கள்.

மாநாட்டில் வைகோ-துரை வைகோ

வயதாகிவிட்டதால் உடல் முன்புபோல் ஒத்துழைக்காததால், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய இயக்கத்தின் நிர்வாகத்தையும், வழிநடத்தும் பொறுப்பையும் வேறு யாருக்கோ வழங்க வைகோவுக்கு மனமில்லை. அதன் விளைவாகவே கட்சிக்குள் சலசலப்பு இருந்தாலும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் முதன்மைச் செயலாளர் பதவியில் துரை வைகோவை ஏற்கெனவே அமரவைத்தார். கட்சி விளம்பரங்களில், நிகழ்ச்சிகளில் துரை வைகோவை முன்னிலைப்படுத்தத் தொடங்கினார். அதற்குத் தலைமையிலிருந்து எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்கினாலும், மோதல் போக்கை ஏற்படுத்தாமல் பாதுகாப்பான விருதுநகர் தொகுதியில் துரை வைகோவை நிறுத்துவதென்று முடிவும் செய்துவிட்டார்போல. அதற்கெல்லாம் முன்னோட்டமாகத்தான் இந்த மாநாடு.

வேறு மாவட்டங்களில் மாநாட்டை நடத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லையென்பதால், தன் தீவிர விசுவாசியான மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன் மூலம் மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்தார். கடந்த ஒரு மாதமாக கடுமையாகப் பணியாற்றி அ.தி.மு.க மாநாடு நடத்திய அதே இடத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்தி முடித்திருக்கின்றனர். இதற்காக வெளியிட்டப்பட்ட விளம்பரங்கள், சுவரொட்டிகள் அனைத்திலும் வைகோவுக்கு இணையாக துரை வைகோ இருந்தார்.

மதிமுக மாநாடு

மாநாட்டு உரையில் திராவிட இயக்க அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், பா.ஜ.கவின் அரசியலையும், சனாதனம் குறித்தும் பேசிய துரை வைகோ, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநர், திருச்சியில் போட்டியிடப்போவதாக பேசிவருகிறார்கள். நான் போட்டியிடப்போவதில்லை. எனக்கு இந்த இயக்கம் கொடுத்த பதவிகூடத் தேவையில்லை. மதிமுக தொண்டன் என்ற அடையாளம் போதும்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேச, வந்திருந்த தொண்டர்கள் ‘நீங்கள் போட்டியிட வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.

வைகோ பேசும்போது தன் அரசியல் பயணத்தை நெகிழ்ச்சியாகப் பேசிவந்தவர், மூன்று வருடங்களுக்கு முன்பு தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது, தனக்குத் தெரியாமலேயே கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தமிழகம் முழுக்கச் சுற்றி வந்து, கட்சியினரை உற்சாகப்படுத்திய மகனின் செயல்பாட்டையும், அவரது மாநாட்டுப் பேச்சையும் சிலாகித்து பேசி மாநாட்டை நிறைவு செய்தார்.

கட்சி நிர்வாகிகள் அனைவரும் துரை வைகோவுடன் படம் எடுக்க போட்டி போட்டனர். பரிசுகளை அளித்தனர். அங்கிருந்து கிளம்பும்போது வாகனத்தின் உள்ளே வைகோ அமர்ந்துகொள்ள மேலே நின்றுகொண்டு அனைவருக்கும் கையசைத்தபடி துரை வைகோ சென்றதன் மூலம் மாநாட்டின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார் வைகோ" என்கிறார்கள்.



from Latest news https://ift.tt/smHMgRN

Post a Comment

0 Comments