Doctor Vikatan:சர்க்கரை, தைராய்டுக்கு மாத்திரை; நடந்தால் மூச்சுவாங்குவது,இரவில் நெஞ்சு வலிப்பது ஏன்?

Doctor Vikatan: என் வயது 74. நான் சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் கிளைகோமெட் (Glycomet -gp) 0.5 மாத்திரை ஒன்றும், ஸிங்கோவிட் (Zincovit) மல்டி வைட்டமின் மாத்திரை ஒன்றும், இரவு Aztor 10 என்ற மாத்திரையும், காலையில் ஒரு Thyronorm மாத்திரை ஒன்றும் கடந்த 9 வருடங்களாக சாப்பிடுகிறேன். இரவு சாப்பிடும் அஸ்ட்டோர் மட்டும் 2019-ம் ஆண்டு முதல் சாப்பிடுகிறேன்.

இப்போது இரண்டு மாதங்களாக நடக்கும்போது கொஞ்சம் மூச்சு இரைக்கிறது (500 மீட்டர் தூரம் நடந்தாலே). இரண்டு மாதங்களில் 3 முறை, இரவில் நெஞ்சில் வலி வந்து கொஞ்சம் நேரம் இருந்து குறைந்தது. எனக்கு எப்போதும் இடது புறம் திரும்பிப் படுக்கும் பழக்கம் உள்ளது. 2 மாதங்களில் சில நாள்களில் எனது இதயத்துடிப்பு என் காதில் ( இடது ) நன்கு துல்லியமாகக் கேட்கிறது.

எனக்கு என்ன பிரச்னை? நான் தனியாக வசிப்பதால் முதலுதவியாக வேறு ஏதேனும் மாத்திரை எடுக்க வேண்டுமா?

- Lakshmi Arumugam, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவருமான சஃபி

டாக்டர் சஃபி

நீங்கள், இப்போது சர்க்கரைநோய்க்கும் தைராய்டுக்கும், கொலஸ்ட்ராலுக்கும் எடுத்து வருகிற மாத்திரைகள் உங்கள் வயதுக்கு ஏற்றவைதான்.

ஆனால், உங்களுக்கு இருக்கும் நோய்களுக்கு ஏற்ற மருந்துகளா அவை என்பது தெரியவில்லை. அதாவது உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதை நீங்கள் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் நடக்கும்போது மூச்சு வாங்குவது, இரவில் நெஞ்சில் வலி வருவது போன்ற உணர்வுகள் உங்களுக்கு இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

எனவே, நீங்கள் இதயநோய் மருத்துவரை அணுகி, எக்கோ பரிசோதனை செய்து பார்த்துவிடுங்கள். அதேபோல உங்களுக்கு முகத்திலோ, கால்களிலோ வீக்கம் ஏதும் இருக்கிறதா, நீங்கள் தினமும் வெளியேற்றும் சிறுநீரின் அளவு குறைந்திருக்கிறதா என்றும் கவனியுங்கள். அப்படி ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தீர்களானால் சிறுநீரக பாதிப்பு இருக்கிறதா என்பதையும் மருத்துவ பரிசோதனையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நெஞ்சுவலி

இந்தப் பிரச்னைகளை எல்லாம் பார்த்து உறுதி செய்த பிறகுதான் உங்களுக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையா என்று சொல்ல முடியும். ஒருவேளை நீங்கள் தற்போது எடுத்து வரும் மருந்துகள் உங்களுக்குப் போதுமானவையாக இல்லாமலும் இருக்கலாம்.

எனவே மருத்துவரை நேரில் அணுகி, ஆலோசனை பெறுவதுதான் இந்த வயதில் நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயல்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/ZLwCWKT

Post a Comment

0 Comments