தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிளான திமுக அரசு பதவியேற்றதும், `அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தியது. அதன்படி தமிழகத்தில் சென்னை, ஸ்ரீரங்கம், பழனி, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில், அர்ச்சகர் ஆக விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கு, ஓராண்டு கால ஆகமம் மற்றும் பூஜை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டு `அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 3 பேர் பெண்கள். முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரி கிருஷ்ணவேணி மற்றும் இளங்கலை பட்டதாரி ரஞ்சிதா ஆகியோர், முதல்முறையாக அர்ச்சகர் பயிற்சியை முடித்து, சான்றிதழைப் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகராகப் பயிற்சி பெற்று, பின்னர் தேவைப்படும் இடங்களுக்குப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதவி அர்ச்சகர் பயிற்சி முடித்த மூவரையும் சந்தித்து, விகடன் சார்பில் வாழ்த்து தெரிவித்துவிட்டுப் பேசினோம்...
ரம்யா கூறும்போது, ``என்னோட சொந்த ஊரு, கடலூர் பக்கம் இருக்கிற மேலாதனூர். எம். எஸ்ஸி கணிதவியல் முடிச்சிருக்கேன். தமிழகத்துல முதன்முறையாக உதவி அர்ச்சகராக வர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெண்கள் எல்லாரும் எல்லாத்துறையிலும் வரணும். வீட்ல வெளியேன்னு எல்லாருமே ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. எல்லாரும் சந்தோஷமா இருக்கிறதுக்கு தான் கோவிலுக்கு வர்றாங்க. பெண்களும் இனி எந்தவித ஏற்றத்தாழ்வு இல்லாம கோவிலுக்குள் வரணும்... அதுதான் என்னோட ஆசை" என்றார்.
கடலூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, ``நான் பி.எஸ்.ஸி கணிதவியல் படிச்சிருக்கேன். மக்களுக்கு சேவை பண்ணனுங்கிற ஆசையிலதான் இந்தத் துறைக்கு வந்தேன். ஆண்கள் 28 பேர், நாங்க 3 பேர் இந்த கோர்ஸ் முடிச்சிருக்கோம். எங்க அப்பா ஊர்ல மாரியம்மன் கோவில் பூசாரியாக இருக்கிறாங்க. அதனாலும் எனக்கு அர்ச்சகராகணும் ஆசை இருந்தது. இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதைப்போல இனி எங்களை எவ்வித எதிர்ப்பும் இல்லாம ஏத்துக்கணும். இன்னும் நிறைய பெண்களும் படிச்சு, அர்ச்சகராகணும்" என்றார்.
ரஞ்சிதாவிடம் கேட்டபோது, ``எங்கப்பா விவசாயம்தான் செய்றாங்க. எனக்கு திருவாரூர் பக்கத்துல கொரடாச்சேரி சொந்த ஊரு. இந்தத் திட்டத்தைக் கேட்டபோதே ரொம்ப புதுசா இருந்தது. அதுனால போய்ச் சேர்ந்தேன். பி.எஸ்.ஸி விஸ்காம் முடிச்சிட்டு ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்த்திட்டு இருந்தேன். ஒரு ஆர்வத்துல போய்ச் சேர்ந்தேன், மொதல்ல கஷ்டமா இருந்துச்சு.
எங்களோட ஆசிரியர்கள் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க. பெண்கள் நிறைய துறைகள்ல இருந்தாலும் அர்ச்சகர் துறையில் மட்டும் இல்ல. இப்ப நாங்க வரப்போறோம். எங்கள மாதிரி நிறைய பேர் வருவாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அர்ச்சகரா பதவி கிடைச்சதும் கோவில் கருவறைக்குள்ள போகக் காத்துட்டு இருக்கோம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி" என்றார் மெய்சிலிப்புடன்.
from Latest news https://ift.tt/UpZ6TG9
0 Comments