மாஞ்சோலை: 'சொர்க்க பூமி' என்பார்கள், அங்கிருப்பவர்களுக்கே உண்மை தெரியும்|1349/2 எனும் நான்|பகுதி 30

வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காலிக விடுதலை வேண்டி, மலைப்பகுதிகளுக்கு படையெடுப்பது பலருக்கும் இயல்பு. ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, அந்த மலைப்பகுதியை “சொர்க்க பூமி” என்றும், அங்கு வாழ்பவர்கள் குடுத்து வைத்தவர்கள் என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுவோம்.

எதார்த்தத்தில் வெயில் போலல்ல மழையைத் தாங்கிக்கொள்வது. அதிலும், சராசரியாக ஆண்டின் பத்து மாதங்கள் வரையிலும் மழைபெய்யும் மாஞ்சோலை மலைப்பகுதியின் பருவநிலை கொஞ்சம் வேறுபட்டது.

அடைமழை காலத்திலும், அன்றைய கணக்குக்கு பறிக்கவேண்டிய தேயிலையின் எடையைப் பறித்தாகவேண்டும். சில சமயங்களில் நாட்கணக்கில் மழை பெய்துகொண்டே இருக்கும். அதுபோன்ற தருணங்களில், எப்படா வெயிலடிக்கும்?! என்று வெயிலுக்காக ஏங்குவோம். அந்த சமயங்களில் நிர்வாகத்திடம் சொல்லிவிட்டு 2/3 நாட்கள் வரை வேலைக்குச்செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள் தொழிலாளர்கள். வேலைக்குச்செல்லாத நாட்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது என்றாலும், அன்றைய வரவு குறைவதால், நிர்வாகம் தனக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகக் கருதியது.

மாஞ்சோலை

1980களின் தொடக்கத்தில், தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி அதற்கு ஒரு தீர்வினைக் கண்டது கம்பெனி. அதாவது, வழக்கமான மாலை 4.30 மணி வரையில்லாமல், பெரு மழைக்காலத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே வேலை. ஆனால், எப்போதும் போல மதிய உணவு இடைவேளை அன்று கிடையாது. காட்டில் நின்றபடியே சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். காலையிலிருந்து ஓய்வின்றி வேலைபார்ப்பதால், அந்த நாளைய வேலையை ‘ஒன் டச்’ (One Touch) என்று சொல்லுவார்கள். சீக்கிரமாக வேலைமுடிந்துவிடும் எனும் உத்வேகத்தில் அதுபோன்ற நாட்களில், வழக்கமாகப் பறிக்கும் எடையைவிடவும், பலரும் கூடுதலாக தேயிலை பறித்துவிடுவார்கள்!

எஸ்டேட் பகுதியில் எப்போது மழை வரும், குளிர் காற்று அடிக்கும், பனி பொழியும், வெயில் அடிக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. மழைக்குத் துணையாய், இலவச இணைப்பாக குளிரும் இணைந்துகொள்ளும். அதனால் ஈரமான / துவைத்த துணிகள் காய்வதற்கு ரொம்பநேரம் எடுப்பதுடன் துர்நாற்றமும் வீசும். குளிரில் ஈரத்துணி அணியவும் முடியாது. அதனால் முடிந்த வரைக்கும் காலையிலேயே துணிகளைத் துவைத்து காயப்போட்ட பிறகே பெண் தொழிலாளர்கள் வேலைக்குப் போவார்கள். சாயங்காலம் வேலைமுடித்து வந்தபிறகு, துவைத்தால், இரவு பொழியும் பனியில் காய்வதற்கு கூடுதல் நேரம் எடுக்கும்.

மாஞ்சோலை

எஸ்டேட்டில் குடை அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. ஆனால் 1990களுக்கு முன்பு வரையிலும் தொரைமார்கள், ஆசிரியர்கள், அய்யாமார்கள் மட்டுமே பெரும்பாலும் குடை வைத்திருப்பார்கள். தொழிலாளிகள் மத்தியில் வெளிநாடு சென்று வந்தவர்கள் உள்ளிட்ட வெகுசிலரிடமே குடை இருக்கும்.

குடையும், ரெயின் கோட்டுகளும் பார்த்து வளர்ந்துள்ள தற்போதைய தலைமுறைக்குத் தெரியாது "கொங்காணி"த்தாளின் பயன்பாடு. ஒருபுறம் குடை வாங்க காசு இருக்காது என்ற போதிலும், அங்கு வேகமாக வீசும் காற்றில் குடை உடைந்து, பறந்துவிடும். ஒரு மழைக்குக்கூட தாங்காது. மட்டுமின்றி, குடை பிடித்தபடியே தேயிலைக்காட்டில் வேலைபார்ப்பது நடைமுறை சாத்தியமில்லாதது என்பதாலும், சுவட்டர் அணிந்து அதற்கு மேல் நீர் புகாத தார்ப்பாயால் இடுப்பைச் சுற்றிலும் கட்டியபடி, தலையிலிருந்து கால்முட்டு வரைக்கும் “கொங்காணி” எனப்படும் பிளாஸ்டிக் தாளால் மறைத்துக்கொண்டு மழைநாளில் வேலைக்குச் செல்வார்கள் தொழிலாளர்கள்

எஸ்டேட் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயங்களில், மழை பெய்யுமென்று தோன்றினாலே போதும், கொங்காணித்தாள் போட்டபிறகு வெளியே வருவதுதான் வழக்கம். மழைபெய்யும் போதான காற்றில், அவ்வப்போது கொங்காணித்தாள் பறந்துவிடும். பெய்யும் மழையைப் பொருட்படுத்தாமல், நனைந்தபடியே அதனைப்பிடிக்க பின்னால் ஓடுவோம். அதனை தவிர்த்திட, தலையிலிருந்து பாதம் வரைக்கும் மறைக்கும் வகையில் கொங்காணித் தாளை, இரண்டு கைகளாலும் இறுக்கமாக பிடித்தபடியே நடக்கவேண்டும். பறக்காமல் இருக்கும் வகையில், கொங்காணித்தாளில் பின்னூக்கு (safety pin) குத்திவிடுவார் அம்மா.

மாஞ்சோலை

1980களின் பிற்பகுதியில் நாலுமுக்கில் ஒரு அதீத மழை நாளின்போது இடி / மின்னல் தாக்கி நின்றுகொண்டிருந்த மரம் பற்றி எரிந்தது. அதே காலகட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்த ஓர் இரவில் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம். மழை வெளுத்துக்கட்டியதின் விளைவாய் எங்கள் லயத்தில் மூன்று வீடு தள்ளியிருந்த வீட்டிற்குப் பின்பகுதியில் உயரமான சுவரிலிருந்து மண் சரிந்து விழுந்துவிட்டது. அதனால் மழைத்தண்ணீர் செல்லமுடியாமல் தேங்க ஆரம்பித்தது.

சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த அப்பா, மழையைப் பொருட்படுத்தாமல் உடனடியாக தலையில் கொங்காணித்தாளை மாட்டிக்கொண்டு, தேங்கியிருந்த மழைநீர் வெளியேறும் வகையில் மண்வெட்டியால் மண்ணை வெட்டிவிட ஆரம்பித்தார். அப்பாவுடன் பக்கத்து வீட்டு ஆண்களும் இணைந்துகொண்டார்கள். அவ்வாறு செய்யவில்லை என்றால், அப்போது எங்கள் லயத்தில் இருந்த எல்லா வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்திருக்கும். அப்பாவின் சமயோசித செயல்பாட்டால் அதிலிருந்து தப்பித்துக்கொண்டோம்.

மாஞ்சோலை

என்னதான் அதிக மழைபொழியும் இடமென்றாலும் மாஞ்சோலை, நாலுமுக்குப் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வோம். நாலுமுக்கில் குடிநீர் விநியோகத்திற்காக தேக்கிவைக்கப்படும் Valve Houseசிலேயே தண்ணீர் இருக்காது. தினமும் இருவேளை திறந்து விடப்படும் தண்ணீர், அந்த சமயத்தில் ஒருவேளையாக சுருங்கிவிடும். அதுவும் எல்லோருக்கும் போதுமான அளவுக்குக் கிடைக்காது. அங்கிருக்கும் சிற்றோடைகளுக்கும், எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநில பகுதிகளுக்கும் சென்று தண்ணீர் பிடித்துவருவோம்.

மழையில் நனைந்தபடியே இருப்பதால் கை விரல்களெல்லாம் விறைத்து சூம்பிவிடும். விறகு ஈரமாக இருக்குமென்பதால் தீ பற்றவைக்க எப்போதும் பெரும்பாடுதான். அதனால் எந்நேரமும் வீட்டில் அடுப்பு எரிந்தபடியும், அதில் வெந்நீர் கொதித்துக்கொண்டும் இருக்கும். அடுப்பு எரியாத சமயங்களில் பக்கத்து வீட்டிற்குப்போய் தேங்காய் சிரட்டையில் தீ கங்கு வாங்கிவருவோம்.

மாஞ்சோலை

மழைநாட்களில் வீட்டிலிருக்கும்போது, அரிசி வறுத்து அதில் தேங்காய் எண்ணையும், சீனியும் போட்டு திண்போம். குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில்,. ஆண்களில் சிலர் சிகரெட்டும் பலர் பீடியும், மதுவும் குடித்து தங்களை வெதுவெதுப்பாக உணர்வதாகச் சொல்லுவார்கள்.

பெரும் புகைபோல மேகம் வேகமாக சூழ்ந்துவிடும். காட்டில் விறகு பிறக்கப்போன சின்ன பிள்ளைகள், தீ எரிந்து புகைவருகிறது என்று நினைத்து பயந்துபோய் வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். பனிமூட்டத்தை மலையாளத்தில் “மஞ்ஞு” எனச் சொல்வதன் தொடர்ச்சியாய் தமிழர்கள் “மஞ்சு” எனச்சொல்லுவார்கள். அதுபோன்ற மஞ்சுமூட்ட நாட்களில், வாகனங்களைத் தொடர்ந்து இயக்கமுடியாத ஓட்டுநர்கள், அதனை நிறுத்திவிட்டு, கண்களுக்குப் பாதை புலப்பட்ட பிறகே மீண்டும் இயக்குவார்கள். அந்த இடத்தில் வாகனம் நிற்கிறது என்பதைத் தெரியாமல், வேறு வாகனங்கள் மோதிவிடக்கூடாது என்பதற்காக, முன்பக்க விளக்குகளை போட்டும், அவ்வப்போது வாகனத்திலிருந்து ஒலி எழுப்பியபடியும் இருப்பார்கள்.

மழை, குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தொழிலாளர்களுக்கு மழை கோட் (Rain Coat), வீட்டுக் கம்பளி, காட்டுக் கம்பளி, குடை மற்றும் இதர தேவையான உபகரணங்களை நிர்வாகம் வழங்கவேண்டும் என்று தோட்டத் தொழிலாளர் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் 1998-1999 கூலி உயர்வுப் போராட்டத்திற்கு முன்னர், கம்பளி தவிர வேறு எதுவும் கொடுத்ததில்லை கம்பெனி. அவ்வாறு கொடுத்த அந்த கம்பளிக்கான பணத்தையும், தொழிலாளர்களிடமிருந்து முழுமையாக வசூலித்தும் கொண்டது.

மாஞ்சோலை

1987ஆம் ஆண்டில் கம்பெனியிடம் ஒரு மனு கொடுத்தது காங்கிரஸ் தொழிற்சங்கம். அதில், எஸ்டேட்டில் ட்ராக்டர் ஓட்டும் டிரைவர்களுக்கு ரெயின் கோட் வழங்க வேண்டும், ஸ்கில்டு தொழிலாளிகளுக்கும், ஐயாமார்களுக்கும், அதிகாரிகளுக்கும் அடுப்பு எரிக்க குறைந்த விலையில் விறகு கொடுக்கவேண்டும், எஸ்டேட்டில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை கீழே கிராமத்தில் உள்ள அவர்களது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவர பயணப்படி கொடுக்கவேண்டும், மாஞ்சோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட எஸ்டேட் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாகன ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

அந்த கோரிக்கைகளை கம்பெனி நிராகரித்தது. அவைகளை நிறைவேற்றக் கோரி, மாஞ்சோலை காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் ஆறுமுகம் தலைவரும், நிர்வாகக்குழு உறுப்பினரான நாலுமுக்கு INTUC மணி அண்ணனும், திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு செய்தார்கள். அங்கு சுமூகத்தீர்வு எதுவும் எட்டாததால், சென்னையில் உள்ள தொழில் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு தொடரப்பட்டது. மாஞ்சோலையில் அமைந்துள்ள பள்ளிக்குச் சென்றுவர, எஸ்டேட் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கம்பெனி வாகன ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டுமெனும் கோரிக்கையைத் தவிர்த்து இதர கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென 30.11.1990ல் தீர்ப்பிட்டது தீர்ப்பாயம்.

மாஞ்சோலை

அந்தத் தீர்ப்பினை இரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தது கம்பெனி. கம்பெனி தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் 23.11.1998 அன்று கம்பெனியின் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் 11 ஆண்டுகள் நெடிய போராட்டத்திற்குப் பிறகு, கோரிக்கைகளில் வெற்றி கண்டது காங்கிரஸ் தொழிற்சங்கம்.

தொழிலாளர்களுக்கு அனுகூலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரும்பொழுது, கூலி உயர்வு கோரி எஸ்டேட்டில் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அதனால் இந்தத் தீர்ப்பு உடனடியாக தொழிலாளர்களிடம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. இருப்பினும் தீர்ப்பின் பலனாய், மீண்டும் வேலைக்குத் திரும்பிய டிராக்டர் ஓட்டுனர்கள் மற்றும் அதிகாரிகள் மழை கோட் உள்ளிட்ட உரிமைகளை அனுபவிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் பலருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த வழக்கும், அதன் பின்னணியும் தெரிந்து இருக்கவில்லை என்பதே எதார்த்தம்.

மாஞ்சோலை

சமீப காலமாக, தென் இந்தியாவில் அதிக மழை பொழியும் பகுதிகள் காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு மற்றும் மாஞ்சோலை தான். எஸ்டேட்டிலிருந்து உடல் உறையவைக்கும் குளிரில் இரண்டு மணிநேரம் மட்டும் பேருந்தில் பயணித்து கீழே கல்லிடை வந்தால், அங்கு வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும். நகரப் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒருமணிநேரம் தொடர்ந்தார் போல் மழை பெய்தால், மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் எஸ்டேட்டில் அடைமழையிலும், விறைக்கும் குளிரிலும் ஓய்வின்றி தேயிலை பறித்தால் தான், இங்கே தேநீர் அருந்தி நம்மை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளமுடியும்.

படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், கார்த்திக், இராபர்ட் சந்திர குமார்



from Latest news https://ift.tt/eCH2cYa

Post a Comment

0 Comments