பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நேற்றைய போட்டிக்குப் பிறகு மைதான ஊழியர்களுக்குப் பரிசளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பைத் தொடரை விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வருகை புரிந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் நேற்று நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதுமட்டுமின்றி இலங்கையின் 345 ரன் இலக்கை சேஸ் செய்து ஒருநாள் உலகக்கோப்பையில் அதிகபட்ச சேஸிங்கை நிகழ்த்திய அணி என்ற சாதனையைப் பாகிஸ்தான் அணி படைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அங்கிருந்த மைதான ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு பாகிஸ்தான் ஜெர்சியைப் பரிசாக வழங்கினார். அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பாபர் அசாம் மட்டுமின்றி பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயிற்சிக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து ஹைதராபாத்தில் தங்கி இருந்தபோதே இந்தியாவில் இருப்பதை போல் அல்லாமல், பாகிஸ்தானில் இருப்பது போலவே உணர்ந்ததாகவும், இந்தியாவில் விருந்தோம்பல் சிறப்பாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தற்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், “ ரசிகர்கள் கொடுத்த ஆதரவில், ராவல்பிண்டியில் விளையாடியது போல உணர்ந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமல்ல மொத்த பாகிஸ்தான் அணிக்கும் அன்பைக் கொடுத்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் இலங்கை அணியையும் ஆதரித்தார்கள். இரு நாடுகள் விளையாடியதையும் ஆதரித்ததைப் பார்த்ததற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று இந்தியாவையும் ரசிகர்களையும் பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/UXHaxud
0 Comments