கடந்த மாதம் உயிரிழந்த நடிகர் ‘என் உயிர்த் தோழன்’ பாபுவின் அம்மா பிரேமலதா இன்று உயிரிழந்திருக்கிறார்.
‘குயிலுக் குப்பம்..குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன’, ஏ ராசாத்தி.. ரோசாப்பூ..’
கல்யாண வீடோ, காதுகுத்து வீடோ, தொண்ணூறுகளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த `என் உயிர்த் தோழன்' பாடல்கள் இவை. இயக்குநர் பாரதி ராஜா தன் உதவி இயக்குநர் பாபுவை ஹீரோவாக நடிக்கராக்கி இயக்கிய படம். பாடல்கள் ஹிட். படம் சுமார் என்றாலும் அறிமுக ஹீரோவான பாபுவின் நடிப்பு கவனிக்கப் பட்டது.
அடுத்தடுத்து சில படங்கள் அவருக்கு கமிட் ஆகின. 10 படங்களூக்கு மேல் புக் ஆனதாகச் சொல்லப்பட்டது. ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். கிராமத்துக் கதைகள் இவருக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆவதாக கோலிவுட்டில் பேசப்பட்ட நிலையில் தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் கமிட் ஆகி நடிக்கத் தொடங்கியிருந்தார். அந்தப் படத்திற்காக ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அக்காட்சியில் மாடியிலிருந்து ஹீரோ குதிக்க வேண்டும். நிஜமாகவே குதிப்பதாக பாபு சொன்ன போது யூனிட்டில் அதை ஏற்க மறுத்திருக்கிறார்கள். ’டூப் வைத்துக் கொள்ளலாம்’ என இயக்குநர் சொன்னதையும் கேளாமல் நிஜமாகவே பாபு குதித்திருக்கிறார்.
அப்போது யாரும் எதிர்பாராத நொடியில் நிலை தடுமாறிய பாபு தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து விட்டன. முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட போதும், அந்தச் சம்பவம் பாபுவை அதன் பிறகு நிமிர்ந்து உட்காரக் கூட முடியாதபடி செய்து விட்டது. எத்தனையோ மருத்துவர்கள், சிகிச்சைகளை மேற்கொண்டு பார்த்தார்கள் அவரது குடும்பத்தினர். ஆனாலும் எதிலும் பலன் கிடைக்கவில்லை.1991ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சினிமாக் கனவுகளுடன் வந்த பாபுவின் வாழ்க்கையையே அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா பிரேமா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார்.
இந்தச் சூழலில் கடந்த மாதம் பாபுவின் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சைகள் பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சில திரைப்பிரபலங்கள் பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பாபுவின் அம்மா பிரேமா மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராஜாராமின் சகோதரி. பாபுவின் இறப்புக்குப் பிறகு ரொம்பவே மனம் உடைந்த நிலையிலிருந்த அவரது அம்மா பிரேமா சரியாகச் சாப்பிடாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மகன் இறந்த துக்கத்துடன் முதுமை காரணமாகவும், அவரது உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு இன்று அவரது உயிர் பிரிந்து விட்டது.
from Latest news https://ift.tt/8ZIaACm
0 Comments