`அள்ளி எடுக்கும் விக்கெட்டுகள்; அதிரடி பேட்டிங்!'- ஆனாலும் சாண்ட்னர் 'Underrated' தான் ஏன் தெரியுமா?

நியூசிலாந்து கிரிக்கெட்டில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் ரச்சின் ரவீந்திரா. இளம் வீரராக உலகக்கோப்பையில் ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்திருக்கிறார்.

இரண்டாவதாக நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்திருக்கிறார். நியூசிலாந்து கிரிக்கெட்டின் சமீபத்தய சென்சேஷன் இவர். இந்த ரச்சின் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில்,

Santner
'மிட்செல் சாண்ட்னர் ஒரு அற்புதமான வீரர். ஆனால், அவர் 'Criminally Underrated' வீரர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். அவர் இன்னும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.' எனக் கூறியிருந்தார்.

ரச்சினின் கருத்தில் எந்த மிகையுமே இல்லை. சாண்ட்னர் ஒரு தீவிரமான 'Underrated' கிரிக்கெட்டர்தான். நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் செய்திருக்கும் பெர்ஃபார்மென்ஸ் இந்த கருத்திற்கு வலுசேர்க்கும் இன்னொரு சாட்சி.

உலகக்கோப்பையின் முதல் போட்டியாக இங்கிலாந்தை எதிர்கொண்டிருந்தது நியூசிலாந்து. எதிர்பார்ப்பு மொத்தமும் இங்கிலாந்து மீதுதான். முக்கியமான வீரர்களை காயம் காரணமாக இழந்து தவித்திருந்தது நியூசிலாந்து. போதாக்குறைக்கு 'எங்களை டிஃபண்டிங் சாம்பியன் என்று சொல்லாதீர்கள். எங்கள் டிஃபன்ஸ் என்கிற வார்த்தையே பிடிக்காது.' என பட்லரும் முறுக்கிக் கொண்டு வந்தார். நியூசிலாந்து பேசவே இல்லை. எல்லாவற்றையும் செயலில் காட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சாண்ட்னர்.

Santner
10 ஓவர்களை வீசியவர் 37 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒன்று பேர்ஸ்ட்டோ விக்கெட். இன்னொன்று வோக்ஸின் விக்கெட்.

பேர்ஸ்ட்டோவை நிற்கவிட்டிருந்தால் பட்லரின் முறுக்கலான பேச்சுக்கு அர்த்தம் சேர்த்துவிட்டுச் சென்றிருப்பார். சரியான நேரத்தில் அவரின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார் சாண்ட்னர். நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஒரு ஆல்ரவுண்டராக முழுமையாக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருந்தார். நியூசிலாந்துதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது

48.4 ஓவர்களில் 293 ரன்களை எடுத்திருந்தது. இன்னிங்ஸ் முடிகையில் 322 ரன்களை சேர்த்திருந்தது. காரணம், சாண்ட்னர் பாஸ் டீ லீடின் கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்களை அடித்திருந்தார். பந்துவீச்சிலும் சரவெடிதான். 10 ஓவர்களில் 59 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸூக்கு பந்துவீசி அவரே கேட்ச்சும் பிடித்துக் கொண்டார். அத்தனைவிதத்திலும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினாலயே அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

உலகக்கோப்பையில் இடதுகை ஸ்பின்னர்கள் அவ்வளவாக 5 விக்கெட் ஹாலை எடுத்ததே இல்லை. இதற்கு முன் யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பையிலும் 2019 உலகக்கோப்பையில் ஷகிப் அல் ஹசனும் 5 விக்கெட் ஹாலை எடுத்திருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு இப்போது சாண்ட்னர்.

Daniel Vettori
நியூசிலாந்து அணிக்காக ஓடிஐ போட்டிகளில் அதிகமாக 5 விக்கெட் ஹாலை எடுத்தவர்களின் பட்டியலில் டேனியல் வெட்டோரி முதல் இடத்தில் இருந்தார். 2 முறை 5 விக்கெட் ஹாலை எடுத்திருக்கிறார். நெதர்லாந்துக்கு எதிராக சாண்ட்னர் எடுத்த 5 விக்கெட் ஹால் ஓடிஐ போட்டிகளில் அவருடைய இரண்டாவது 5 விக்கெட் ஹால். ஆக, வெட்டோரியின் சாதனையை சாண்ட்னர் சமன் செய்திருக்கிறார்.

உலகக்கோப்பைகளில் ஒரே போட்டியில் 30 க்கும் அதிகமான ரன்களையும் அடித்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்களின் பட்டியலில் கபில்தேவ், ஆண்டி பிச்சல், யுவராஜ் சிங், ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் வரிசையில் சாண்ட்னரும் இணைந்திருக்கிறார். இதற்கு முன் எந்த நியூசிலாந்து வீரரும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை.

சாண்ட்னரை ஏன் 'Underrated' கிரிக்கெட்டர் என சொல்கிறோம் என்பதற்கான காரணமும் இதுதான். பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்திருக்கிறார். பல ஜாம்பவான்களின் சாதனைகளை சமன் செய்திருக்கிறார்.
Santner

ஆனாலும் அவர் இன்னமும் ஒரு 'Unsung Hero' தான். 2019 உலகக்கோப்பையை இந்தியர்களால் மறக்கவே முடியாது. 130 கோடி இதயங்களை சுக்குநூறாக உடைத்திருந்தது நியூசிலாந்து. மறக்கமுடியாத அந்தப் போட்டியில் நியூசிலாந்து வெல்ல மிக முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருந்தது சாண்ட்னரின் பந்துவீச்சு. கொஞ்ச நேரம் நின்று ஸ்கோரை முன்னகர்த்தி சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா என இருவரின் விக்கெட்டையுமே அவர்தான் வீழ்த்தியிருந்தார்.

சாண்ட்னர் வீழ்த்தியதில் ஒரு விக்கெட் தப்பியிருந்தால் கூட அந்தப் போட்டியின் முடிவு வேறாக மாறியிருக்கும். சென்னை அணிக்காக ஐ.பி.எல் இல் ஆடும்போது கூட அணியின் பிரதான வீரராகவெல்லாம் பெரும்பாலும் இருக்கமாட்டார். ஆனால், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் தன்னால் இயன்ற தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார். ஒரு போட்டியில் சென்னை வெல்ல கடைசிப் பந்தில் சிக்சர் அடிக்க வேண்டிய சூழலில் அப்போதுதான் க்ரீஸூக்குள் வந்த சாண்ட்னர் சிக்சர் அடித்து போட்டியை வென்று கொடுப்பார். இக்கட்டான சூழலில் அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து கொடுக்கும் வல்லமை எப்போதுமே சாண்ட்னருக்கு இருந்திருக்கிறது.

சமீபத்திய வரலாற்றின்படி பார்த்தால் டேனியல் வெட்டோரிக்கு ஒத்தவராக சாண்ட்னரை பார்க்கலாம். வெட்டோரி நியூசிலாந்து அணிக்கே கேப்டனாக இருந்தவர். அவருடன் சாண்ட்னரை ஒப்பிட வேண்டாமெனினும், ஒரு இடதுகை ஸ்பின்னராக ஆல்ரவுண்டராக வெட்டோரியின் வழி வருபவராக சாண்ட்னரை எடுத்துக் கொள்ளலாம். வெட்டோரியிடமிருந்து பேட்டனை வாங்கிக் கொண்டு நியூசிலாந்து அணிக்காக தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

Santner
'விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மகிழ்ச்சி. ஆனால், நான் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வீசவில்லை.' என ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருத்தப்பட்டிருக்கிறார் சாண்ட்னர்.

ஆர்ப்பரிப்பின்றி கொண்ட்டாட்டங்களை எதிர்பார்க்காமல் ஓடிக்கொண்டிருப்பது சாண்ட்னரின் குணம் மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த நியூசிலாந்தின் குணம். அதன்வழி அவரும் நிற்கிறார். ஆனாலும் தகுதியானவர் என்பதால் நாம் கொண்டாடித்தான் ஆக வேண்டும். வாழ்த்துகள் சாண்ட்னர்!

சாண்ட்னரின் ஆட்டம் குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!


from Latest news https://ift.tt/0b84xzO

Post a Comment

0 Comments