பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் தேர்தல் இலவசங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றிக்காக, இலவசங்கள் கொடுப்பதாகத் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்கவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசியிருக்கின்றன.
பா.ஜ.க., பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்துவருகிறது. அதேசமயம் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும், பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும், காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.
இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தால் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும். பா.ஜ.க-வும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறது. மீண்டும் வெற்றிபெற்றாலும் முதல்வர் பதவி கிடையாது என்று மறைமுகமாக சிவ்ராஜ் சிங் செளகானிடம் பா.ஜ.க தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படியிருந்தும் சிவ்ராஜ் சிங் இலவசங்களை அறிவிக்கத் தயங்கவில்லை. தற்போது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டு வரும் 1,250 ரூபாய் தேர்தல் வெற்றிக்குப் பிறகு 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று சிவ்ராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். 1.32 கோடி பெண்களுக்கு இந்தத் தொகையைக் கொடுக்க மட்டும் 47 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும்.
இது தவிர சிலிண்டர் 450 ரூபாயில் வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் அறிவித்திருக்கிறார். இவற்றைக் கணக்கிட்டால் 50,000 கோடியைத் தாண்டும். மத்தியப் பிரதேசத்தில் இரண்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பட்ஜெட்டில் 50,000 கோடிக்குச் செலவு இருக்கிறது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இலவசங்களை அறிவித்து வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல், ராஜஸ்தானிலும் இலவசத் திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்த திட்டங்களோடு சேர்த்து, விவசாயிகளுக்கு 2,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு நிகராக பா.ஜ.க-வும் இலவசத் திட்டங்களை அறிவித்திருப்பதோடு பிரதமர் மோடியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு 9 முறை சுற்றுப்பயணம் வந்து அசோக் கெலாட் அரசை ஊழல் அரசு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அசோக் கெலாட்டுக்கு அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் ஆதரவாளர்கள் முழுமையாக ஆதரவு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சச்சின் பைலட்டுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் அசோக் கெலாட், கடந்த சில மாதங்களாக மட்டும் சச்சின் பைலட்டை விமர்சித்துப் பேசுவதை நிறுத்தியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.
ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் சக்திகளாக இருந்துகொண்டிருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளபோதிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ வாசுதேவ் அளித்த பேட்டியில், ''மக்கள் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற முடிவுசெய்துவிட்டார்கள். தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இளைஞர்கள், விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர்'' என்றார்.
இலவச அறிவிப்புகளை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. இது எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/jQbGk6N
0 Comments