வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் ஏன்?

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு அபூர்வா ஐ.ஏ.எஸ் நியமிக்கப் பட்டுள்ளார். மற்ற துறைகளைவிட வேளாண்மைத் துறைக்கு எப்போதும் அதிக குற்றச்சாட்டுகள் இல்லாத, அதேசமயம் விவசாயிகளோடு இணைந்து பணியாற்றுகிற மனப்பக்குவம் உள்ளவர்களைத்தான் நியமிப்பார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வேளாண்துறை செயலராக இருந்தார் ககன்தீப் சிங் பேடி.

வேளாண் வணிகத் திருவிழா-2023

2021, மே மாதம் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது வேளாண்துறைக்கு செயலராக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதற்கு முன் போக்குவரத்துத் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இவரும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாற்றப்பட்டிருப்பது வேளாண்துறையிலும் விவசாயிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பெரிய அளவில் ஏதும் புகார்கள் இல்லாதவராக இருந்து வந்த அவரை, வேறொரு துறைக்கு மாற்றியிருப்பதால் புதிதாக வருபவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வேளாண்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, `பணியிட மாறுதல் வழக்கமானதுதான். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிடத்தில் இருக்கக் கூடாது. துறை சார்ந்த வளர்ச்சியின் காரணமாகவும், அந்தத் துறையைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்தவராகவும் இருந்தால் தொடர்வார்கள். மற்றபடி மாறுதல் என்பது அரசுத்துறையைப் பொறுத்தவரை இயல்பானது” என்கிறார்கள்.

வேளாண் பட்ஜெட்

``வேளாண்துறை செயலர் மாற்றப்படுவது அமைச்சருக்கே தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. காரணம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தன்னுடைய பொண்ணு கல்யாணம் சம்பந்தமாக பிஸியாக இருக்கிறார். எல்லாத்தையும் மேலிடத்தில் உள்ள மருமகன்தான் முடிவு எடுக்கிறார். கட்சியில் மூத்தவராக இருந்து வரும் அமைச்சரிடம் கேட்டிருந்தால் மாற்றத்துக்கு உடன்பட்டிருக்க மாட்டார். காரணம் மூன்று முறை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது, நிறைய விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம், இயற்கை வேளாண் கொள்கை, வீட்டுத்தோட்டம், பசுமைப் பூங்காக்கள், சென்னையில் வேளாண் திருவிழா நடத்தி கவனம் ஈர்த்தது எனப் பல விஷயங்களை அமைச்சர் தலைமையில் செய்திருப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் சமயமூர்த்தி. இன்னும் பல திட்டங்களைக் கொண்டு வருவதற்கு இருந்த நிலையில் அவரை மாற்றியிருப்பது வருத்தத்துக்குரியது. வேளாண்துறைக்கு இது இழப்பு. அமைச்சர் துரைமுருகன் இருக்கும் துறையிலேயே அதிகாரிகளை மாற்றம் செய்வது குறித்து அவரிடம் கேட்பதில்லை. பிறகு, எப்படி இந்த விஷயத்திலும் அமைச்சரை கேட்டிருப்பார்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.

``எங்களைப் பொறுத்தவரை வேளாண்துறை செயலர் இந்தத் துறையைப் பற்றி நன்கு தெரிந்தவர் அல்ல. அவருக்கு முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலும் முழுமையாக இல்லை. மற்ற துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மக்கள்கிட்ட அதிகம் பேசும் வாய்ப்பில்லை. ஆனால், வேளாண்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகள் தாண்டி விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகளிடம் பேச வேண்டிய தேவை உள்ளது. முன்பு வேளாண் துறை செயலராக இருந்த ககன்தீப் சிங் பேடி மீது சில குறைகள் இருந்தாலும், எளிதில் அணுகக்கூடிய வராக இருந்தார்.

வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில்

பிரச்னைகளைப் புரிந்துகொள்வார். நாங்கள் கரும்பு பிரச்னை சம்பந்தமாகப் பேச போயிருந்தபோது, அந்தப் பிரச்னை குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இவர் ஆர்வம் காட்டவில்லை. `இந்த பிரச்னை எனக்குப் புரியவில்லை. நான் இந்தத் துறைக்கு புதுசு’ என்று பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன பிறகும் சொல்கிறார். அவர் மீது பெரிய புகார்கள் இல்லையென்றாலும், செயல்பாடுகள் சொல்லிக்கொள்கிற அளவுக்கு இல்லை. ஆட்சியாளர்கள் சொல்வதை சரியாகக் கடைப்பிடிப்பார். துறையின்மீது கறை படியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார்” என்கிறார்கள் விவசாய பிரதிநிதிகள்.

அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, ``அபூர்வா ஐ.ஏ.எஸ்ஸுக்காகத்தான் இந்தப் பணியிட மாற்றம் நடந்திருக்கிறது. வீட்டு வசதித் துறை மிகவும் முக்கியமான துறை. அந்தத் துறையில் அவரின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்ததால், அந்த இடத்துக்கு யாரைப் போடுவது என்று மேலிடம் யோசித்திருக்கிறது. புகார்கள் ஏதும் இல்லாத, அதேசமயம் மேலிடம் கொடுக்கும் வேலையை செய்து முடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறார்கள்.

சமயமூர்த்தி

அந்த வகையில்தான் சமயமூத்தியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சொல்லப்போனால், இது அவருக்கு பதவி உயர்வு மாதிரிதான். அதேபோல அபூர்வா ஐ.ஏ.எஸ்ஸும் விரைந்து முடிவு எடுக்கக் கூடியவர். ஊழல் புகார் அற்றவர். தைரியமானவர் என்று பெயரெடுத்தவர். அதனால்தான் வேளாண்துறையை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.

``எந்தத் திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதில்லை. கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால்தான், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலராக இருந்த அபூர்வா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் அடுக்குமாடி கட்டுமான திட்ட அனுமதியில் இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இனி கட்டட அனுமதி பணிகள் சுறுசுறுப்பாகும். இந்தத் துறையை சீர்ப்படுத்தவே ஐ.ஏ.எஸ் அதிகாரி சமயமூர்த்தியை, இந்தத் துறைக்கு செயலராக மாற்றியுள்ளார்கள். இதை வரவேற்கிறோம்’’ என்கின்றனர் கட்டுமான துறையினர்.



from Latest news https://ift.tt/aUCgoHc

Post a Comment

0 Comments