அன்று
70s மற்றும் 80s கிட்ஸின் மறக்கமுடியாத நாஸ்டால்ஜியா தருணங்களின் டாப் லிஸ்ட் ஒன்றைப் போட்டால் அதில் முதலிடத்தில் கேசட் ரிக்கார்டர்களும் அதில் பாடல் கேட்ட காலமும் நிச்சயம் இருக்கும். கேசட் என்ற பெயரைக் கேட்டாலே அது ஒரு அழகிய நிலாக்காலம் எனப் பாட ஆரம்பித்து விடுவார்கள் 80ஸ் கிட்ஸ். ஜஸ்ட் ஒரு 30 வருடத்துக்குள் தோன்றி, புகழின் உச்சிக்கே சென்று பின் தடம் தெரியாமல் மறைந்து போனாலும், அது கொடுத்த அந்த அற்புதமான சுகானுபவம் காலத்தாலும் மறக்க முடியாது.
ஸ்பாட்டிஃபை, ஐட்யூன்ஸ் எல்லாம் பிறக்கும் முன், டேப் ரெகார்டரும் ஆடியோ கேசட்டும் கோலோச்சிய 80 மற்றும் 90 காலப்பகுதி அத்தனை இனிமையானது. கேசட்டுகளில் நமக்குப் பிடித்த பாடல்களைத் தெரிவு செய்வதே ஒரு தனி டாஸ்க். இன்று இருப்பது போல் ஜஸ்ட் ஒரு கிளிக்கில் Add Playlist-ஐ அமுக்குவது போல ஒன்றும் அது இலகுவானதல்ல. ஒரு தவத்தைப் போல அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெறும். ஏனெனில் 60 நிமிட கேசட்டில் 12 பாடல்களும் 90 நிமிட கேசட்டில் 18 பாடல்களும் மட்டுமே பதியலாம். பெரும்பாலானோரின் சாய்ஸ் 60 நிமிட கேசட்டுகள்தான். அந்த 60 நிமிட கேசட்டில் பதிய 12 பாடல்களைத் தெரிவு செய்வதற்கு நாம் தயாரானது போல பரீட்சைக்குக் கூட தயாராகி இருக்க மாட்டோம். அவ்வளவு தூரம் மெனக்கெட்டு, தேடித் தேடி, பிடித்த 20 பாடல்களின் லிஸ்ட்டைத் தயாரித்து, அதில் ரொம்பப் பிடித்தது, அவ்வளவு பிடிக்காதது என்று கொஞ்சம் கொஞ்சமாக ஷார்ட் லிஸ்ட் செய்து, கடைசியாக வடித்து எடுத்த முத்தான 12 பாடல்களை வரிசையாக ஒரு தாளில் எழுதிக்கொண்டு மியூஸிக்கல்ஸுக்குச் செல்வதே ஒரு தனிக் கதை.
அங்கே ஒரு நோட்டுப் புத்தகம் வைத்திருப்பார்கள். அதில் அழகிய தெளிவான கையெழுத்தில் எல்லா பாடல்களையும் பட வரிசையில் அல்லது இசையமைப்பாளர்கள் வரிசையில் என எழுதி வைத்திருப்பார்கள். நமது லிஸ்டில் இருக்கும் பாடலை அந்த நோட்டுப் புத்தகத்தில் தேடி, அதற்கான நம்பரை நமது லிஸ்டில் குறித்துக் கொடுத்தால் ஒரு வாரம் கழித்து வரச்சொல்வார்கள். அந்த ஒரு வாரம் எப்போது வரும் என்று பிரசவ அறையின் வெளியே டென்ஷனோடு வெயிட் பண்ணும் அப்பா கேரக்டர் போல, படபடப்போடு காத்திருந்து, கரெக்ட்டாக அந்த நாள் வந்ததும் மியூஸிக்கல்ஸ் சென்று வாங்கி வருவோம். வீட்டுக்கு வந்த மறு நிமிஷமே அதைப் போட்டுப் பார்க்க/கேட்க வேண்டும் என்று மனசு துடிக்கும். ஆனால் கேசட்டை டேப் ரிக்கார்டரில் போட்டு பிளே செய்து முழுசா ஒரு பாட்டைக் கூட கேட்க மாட்டோம். முதலில் எல்லா பாடலையும் மிஸ் பண்ணாமல் பதிவு செய்திருக்கிறார்களா என்று செக் செய்ய, ஃபார்வார்டு பட்டனை அமுக்கி அமுக்கி ஸ்கிப் செய்து சரி பார்ப்போம். நாம் கொடுத்த லிஸ்ட் படி எல்லா பாடல்களும் கரெக்ட்டாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்து முடித்ததும் தான் அப்பாடா என்ற நிம்மதிப் பெருமூச்சே வரும்.
அடுத்து அந்த கேசட்டின் பிளாஸ்டிக் கவரின் உள்ளே ஒரு தடித்த அட்டை இருக்கும். அதில் கரெக்ட்டாக 12 அல்லது 18 வரிகள் இருக்கும். அதில் கேசட்டில் உள்ள பாடல்களை வரிசையாக அழகான, குட்டிக் குட்டி கையெழுத்தில் எழுதி வைப்போம். எந்தப் பாடல் எந்த கேசட்டில் உள்ளது என்று இலகுவாகக் கண்டுபிடிக்க இந்த டெக்னிக் உதவியது. அதே போலக் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களின் பாடல்களை மட்டும் பதிவு செய்த Default கேசட்டுகளும் விற்பனைக்கு இருக்கும். கேசட்டைப் போட்டு, ஸ்பீக்கர் கும்மு கும்மு என்று அதிரும்படியாக பாடல்களை அலற விட்டுக் கேட்கும் ஆனந்தமே அலாதியானது.
எல்லா கேசட்டுகளிலும் A-B என்று இரு பக்கங்கள் இருக்கும். ஒரு பக்கம் பாடி முடித்ததும் மறு பக்கம் திருப்பிப் போட வேண்டும். ஆனால் பெரும்பான்மையான ரிக்கார்டர்களில் அதுவே ஆட்டோமேடிக்காக மறுபுறம் பாட ஆரம்பிக்கும். எந்தப் பக்கம் எந்தப் பாடல் உள்ளது என்பது சில நாள்களிலேயே நமக்கு அத்துப்படியாகி விடும்.
அதே போல வெறும் Empty கேசட்டுகளையும் கூட வாங்கி வைத்திருப்போம். குறைந்தது மூன்று நான்கு Empty கேசட்டாவது கைவசம் வைத்திருப்போம். நம்மிடம் இல்லாத பாடல்கள் நண்பர்களிடம் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கி வந்து, டபுள் ஸைட் டேப் ரிக்கார்டரில் ஒரு பக்கம் நண்பர்களிடம் வாங்கிய பாடல் கேசட்டையும், மறு புறம் நமது Empty கேசட்டையும் போட்டு, பிளே அண்டு ரெகார்ட் பட்டன்களை ஒன்றாக அழுத்தினால் போதும். நண்பரின் கேசட்டில் இருக்கும் அத்தனை பாடல்களும் நமது கேசட்டுக்கு காப்பி செய்யப்படும். அதே போல எஃப்எம்களில் நமக்குப் பிடித்த பாடல் ஒளிபரப்பாகும் போது தலை தெறிக்க ஓடி வந்து, அந்தப் பாடலை ரெகார்ட் செய்வதும் ஒரு த்ரில்லிங்கான அனுபவமாகவே இருந்தது.
80, 90களில் எல்லாம் வாட்ஸ்ஆப்பாக இருந்ததே இந்த கேசட்டுகள்தான். அது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்போது தூரத்தில், குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் சொந்தங்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப இந்த கேசட்டுகளைத்தான் அன்று பயன்படுத்தினோம். மியூஸிக்கல்ஸில் ஒரு வெற்று கேசட்டை வாங்கி வந்து, அதில் மெசேஜை நமது சொந்தக் குரலிலேயே பதிவு செய்து, பத்திரமாகத் தபாலிலோ அல்லது தெரிந்தவர்கள் கையிலோ அனுப்பி வைப்போம். அவர்களும் பதிலுக்கு அப்படியே குரலைப் பதிவு செய்து பதில் அனுப்புவார்கள். பொதுவாகக் கடிதத்தில் வந்த பிரியம், குரல் வழியே கேட்பது இன்னும் கிளர்ச்சியாக இருக்கும். காத்திருந்து காத்திருந்து, தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் பார்சலைப் பிரித்து, அதில் இருக்கும் கேசட்டை எடுத்துப் போட்டு, நம் பிரியத்துக்குரியவர்கள் பேசிய குரலைக் கேட்கும் அந்தத் தருணங்கள் கொடுத்த சிலிர்ப்பான அனுபவங்களை எந்த வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜூம் தந்துவிடாது.
அடிக்கடி சிக்கிக்கொள்ளும் டேப் ரீலை பென்சிலால் சுத்திச் சுத்தி சரி செய்வது, வெடித்துப் போன டேப்பை குயிக் பிக்ஸ் போட்டு ஒட்டி வைப்பது, டேப் ரெக்கார்டருக்குள் சிறிய பெயின்ட்டிங் பிரஷ்ஷைப் போட்டு கிளீன் செய்வது எனச் சிறு சிறு மெக்கானிக்கல் வேலைகளையும் கற்று வைத்திருந்தோம். தொய்வடைந்த கேசட்டுகள் பின்னாளில் வீட்டிலுள்ள சிறுவர்களின் விளையாட்டுப் பொருள்களாக மாறின. அதன் உள்ளே இருக்கும் ஃபிலிம் சுருளை உருவி பட்டம் விட்ட நாள்கள் எல்லாம் மனதில் தென்றல் வீசும் தருணங்கள்.
70ஸ், 80ஸ் கிட்ஸின் தலைமுறைகள் இசை மற்றும் பதிவுகளை மிகவும் பரந்த அளவில் பகிர்ந்து கொள்ள அனுமதித்த முதல் தொழில்நுட்பமே கேசட் டேப்தான். பாடல்களுக்குப் போலவே திரைப்படங்களும் VHS என்று அழைக்கப்பட்ட டேப்களில் வரும். பிடித்த திரைப்படங்களைத் தெருவுக்குத் தெரு இருக்கும் வீடியோ ஷாப்களில் வாடகைக்கு எடுத்து வந்து பார்ப்போம். இது பைரஸி என்றாலும் அவ்வாறான காலகட்டத்தில் போதிய விழிப்புணர்வு இன்றி இதைச் செய்தவர்கள்தான் ஏராளம். 'டெக் எடுத்துப் பார்த்தோம்' என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.
ID கார்டு அல்லது ஒரு தொகை பணத்தை டெபாசிட்டாக வைத்து எடுத்து வரும் VHS டேப்புகளில் படம் பார்ப்பதென்றாலே வீட்டில் ஒரு மினி திருவிழாதான். வீட்டிலுள்ள அனைவரும் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, ஒன்றாக வரவேற்பு அறையில் கூடி அமர்ந்ததும் திரைப்படம் போடப்படும். ஒன்றாக குடும்பமாக ஓரிடத்தில் அமர்ந்து பார்த்து ரசித்த அந்த நாள்களை எல்லாம் உண்மையில் தொழில்நுட்பம் சிதறடித்து விட்டது. இன்று நியூக்ளியர் குடும்பங்களாக, ஆளுக்கு ஒரு மொபைல்போனை கையில் வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் தனித்தனி தீவுகளாக வாழும் இக்கால தலைமுறைக்குக் கிட்டாத பொக்கிஷமான காலங்கள் அவை. ஒவ்வொரு கேசட்டிலும் பாடல்கள் மட்டுமல்ல, நாம் நீண்ட காலமாக மறந்துவிட்ட நினைவுகளும் சேர்ந்தே பதியப்பட்டு இருக்கின்றன.
இன்று, 2K-கிட்ஸ் எல்லாம் வேடிக்கையான, ரெட்ரோ அல்லது வின்டேஜ் கலைப்பொருள்களைப் போல கேசட் டேப்களைப் பார்க்கலாம். ஆனால் இந்த அற்புதமான கண்டுபிடிப்புதான் இன்று சமூகம் கண்டிருக்கும் சில சிறந்த தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
அட... கேசட் ரெகார்டர் பற்றி எழுத வந்துவிட்டு நாஸ்டாலஜியாவுக்குள் மூழ்கிப்போய் வேறு எதையோ எழுதிக்கொண்டு இருக்கிறேன் பாருங்கள். என்னையும் அறியாமல் நினைவுகள் என்னை இருபது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டன. ஓகே, நம்ம மேட்டருக்கு வருவோம்... 2K கிட்ஸுக்கு மியூசியமில் மட்டுமே காணக் கிடைக்கும், 70s 80s, 90s கிட்ஸ்ஸுக்கு எல்லாம் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலங்களைக் கொடுத்த, இன்றைய நவீன ஸ்பாட்டிஃபைக்கும் ஆப்பிள் ஐட்யூன்ஸுக்கும் முன்னோடியாக இருந்த கேசட் ரிக்கார்டர்களைக் கண்டுபிடித்த புண்ணியவான்களும் ஐரோப்பியரே! ஆக, அடுத்த வார யூரோ டெக்கில் கேசட் டேப் Part 02!
- Euro Tech Loading...
from Latest news https://ift.tt/MKRxU12
0 Comments