இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினருக்கும் இடையே 13-வது நாளாக சண்டை நீடித்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. காஸாவின் பல பகுதிகள்மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. ஏராளமான ஏவுகணை குண்டுகள் இஸ்ரேலிலிருந்து வீசப்பட்டதாகவும், அதில் ஏராளமானோர் பலியானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸாவில் மருத்துவமனைமீது நடைபெற்ற தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நேரத்தில் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதுமிருந்து கண்டனம் எழுந்திருக்கிறது. அந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதை இஸ்ரேல் மறுத்திருக்கிறது. ஹமாஸ்போலவே பாலஸ்தீனத்தில் இயங்கிவரும் வேறோர் ஆயுதம் தாங்கிய அமைப்புதான் அந்தத் தாக்குதலை நடத்தியது என்றும் இஸ்ரேல் கூறுகிறது. அப்படியென்றால், மருத்துவமனை மீதான தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று ஆதாரங்களுடன் இஸ்ரேல் நிரூபிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியிருக்கிறது.
காஸாவிலுள்ள மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை என்று ஜோ பைடனும் கூறியிருக்கிறார். அதேநேரம், அரபு நாடுகள் அனைத்தும் மருத்துவமனை மீது இஸ்ரேல்தான் குண்டு வீசித் தாக்கியது என்று குற்றம்சாட்டுகின்றன.
வான்வழித் தாக்குதல் மூலம் காஸாவிலுள்ள முக்கிய கட்டடங்களை இஸ்ரேல் தகர்த்துவருகிறது. ஜோ பைடன் பயணத்தால் காஸா மீதான தாக்குதல் குறையும் என்று பார்த்தால், முன்பைவிட தாக்குதல் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. முப்படைத் தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் தயாராகிவரும் நேரத்தில், அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 2,000 வீரர்கள் விரைவில் இஸ்ரேல் செல்லவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
அதேநேரம், ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், இஸ்ரேல் ராணுவத்துக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையுமே அமெரிக்க வீரர்கள் வழங்குவார்கள் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
காஸா மீதான தாக்குதல் இனிமேல் மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ‘ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் தீவிரமடைந்துவருகிறது. தற்போது அடுத்தகட்ட போருக்குத் தயாராகிவருகிறோம்’ என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் கூறியிருக்கிறார்.
காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டுமென்று கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட ஐந்து நாடுகள் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. போதிய வாக்குகள் கிடைக்காததால், ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
ஹமாஸ் படையையும், அதன் கட்டமைப்புகளையும் முற்றிலுமாக அழித்தொழிக்கும் வரை தாக்குதலைத் தொடருவது என்ற முடிவை இஸ்ரேல் எடுத்துவிட்டது. எனவே, உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. விரைவில் தரைவழித் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். எத்தனை நாள்கள், எத்தனை வாரங்கள், எத்தனை மாதங்களுக்கு போர் நடைபெறும் என்று சொல்ல முடியாது என்று கூறியிருக்கும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள், நீண்ட யுத்தம் நடைபெறும் என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/DR09wtv
0 Comments