தேங்கும் நிதி; கைமாறும் அதிகாரம் டு குஷியில் மதிமுக; கடுப்பில் உடன்பிறப்புகள்! - கழுகார் அப்டேட்ஸ்

“தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” என துரை வைகோ மேடையில் பேசினாலும், அவருக்காக விருதுநகர் தொகுதியில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது ம.தி.மு.க. தேர்தல் பொறுப்பை ஏற்றிருக்கும் மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதில், ``நமக்கு விருதுநகர் தொகுதி கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

வைகோ-துரை வைகோ

நம் வேட்பாளர் துரைதான். அவரை அமோக வெற்றிபெறச் செய்வதற்கான வேலைகளை இப்போதே தொடங்குங்கள்’’ என்று பேசியிருக்கிறார் பூமிநாதன். `தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் ஆள் ஆளுக்குத் தொகுதியைப் பிரித்து வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இதுக்கெல்லாம் ஒரு முடிவுகட்டவில்லையென்றால், தேர்தல் முடிவுகள் நிச்சயம் எதிர்பார்த்த மாதிரி இருக்காது’ என அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள் தென்மாவட்ட சீனியர் உடன்பிறப்புகள்!

அந்த அமைச்சர் சிறைக்குச் சென்ற பிறகு அவரது பெயரைச் சொல்லி இயங்கிவந்த மூன்றெழுத்து கம்பெனியின் செயல்பாடுகளும் முடங்கிவிட்டன. இதனால் டாஸ்மாக் மூலம் மேலிடத்துக்கு வந்துகொண்டிருந்த கட்சி நிதி ஆங்காங்கே தேங்கியிருக்கிறதாம். ஏற்கெனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை முன்னிறுத்தி மத்திய அரசு பூச்சாண்டி காட்டிவருவதால், தங்களிடம் தேங்கிய நிதியைப் பாதுகாக்க முடியாமல் தவித்துவருகிறார்களாம் சில மாண்புமிகுக்கள். இந்தத் தேக்கத்தைச் சரிசெய்யச் சொல்லி தலைமைக் கழகத்திடம் கெஞ்சுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்கிறார்கள்.

நிலைமையைச் சரிசெய்ய, டாஸ்மாக் வசூலை மாவட்டச் செயலாளர்களிடம் கொடுத்துவிடலாம் என மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம். தேர்தல் நேரத்தில் இது கட்சிக்கும் பயன்படும் என்பதே இந்த முடிவுக்குக் காரணம். வரும் டிசம்பருக்குள் அதிகாரம் கைமாறும் என்று சொல்லப்படுவதால், மாவட்டச் செயலாளர்கள் பலரும் ஏக குஷியில் இருக்கிறார்களாம்.

தலைநகரின் தலைமை காவல் அலுவலகத்தின் ரகசியத் தகவல்களை அங்கு பணியாற்றும் அதிகாரி ஒருவர், மாநில தலைமை காவல் அலுவலகத்துக்கு உடனுக்குடன் ரிப்போர்ட்டாகக் கொடுத்துவந்திருக்கிறார். இந்த விஷயத்தைக் கண்டுபிடித்து ஷாக்கான தலைநகர பெரிய அதிகாரி, அவரை இடமாற்றம் செய்யும் ஏற்பாட்டில் இறங்கினாராம். ஆனால், மாநில அதிகாரியின் உதவியால் நடவடிக்கையிலிருந்து தப்பித்துவருகிறாராம் அந்த ஸ்லீப்பர் செல். தன் அலுவலகத்தில், தனக்குக்கீழே இருந்துகொண்டே தனக்கு ஆப்படிக்கும் அந்த ஸ்லீப்பர் செல் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் அந்த அதிகாரி. ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையிலான இந்த முட்டல் கோட்டை வரை பேசுபொருளாகியிருக்கிறது!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சொந்தச் சமூகத்தினரின் எதிர்ப்பையும் தாண்டி தனக்குத் துணை நின்றதால், அந்த மதுரை மாஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக்கினார் துணிவானவர். ‘சீனியர்கள் பலர் இருக்க, பணிவானவரின் பதவியை தென்னகத்தின் தளபதியான மதுரை மாஜிக்கே கொடுத்திருக்கிறேன்’ என்று சொல்லியே செலவு பிடிக்கும் வேலைகளையெல்லாம் மதுரைக்காரரின் தலையில் கட்டினாராம் துணிவானவர். ஆனால், ஒன்றே கால் ஆண்டுகள் ஆகியும் ஒரு நாள்கூட அந்த மதுரைக்காரரால் சட்டமன்றத்தில் தன் பதவிக்குரிய நாற்காலியில் உட்கார முடியவில்லை. ஆரம்பத்தில், ‘அந்த நாற்காலியிலிருந்து பணிவானவரை எழுப்புங்கள்’ என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த துணிவானவர், இப்போது சுத்தமாக அதை மறந்துவிட்டாராம். சமீபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் அந்த நாற்காலியையே ஏக்கமாகப் பார்த்த மதுரை மாஜியிடம், ‘விடுப்பா... பார்த்துக்கலாம்’ என்று துணிவானவர் ஆறுதல்கூட சொல்லவில்லையாம். “கன்றுக்குட்டி செத்துப்போன பிறகும், அதன் தோலால் செய்யப்பட்ட வைக்கோல் கன்றுகுட்டியைக் காட்டி பால் கறப்பதுபோல, இன்னமும் என்னிடம் கறந்துகொண்டிருக்கிறார் துணிவானவர். எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது” என்று மதுரைக்காரர், தன் சகாக்களிடம் புலம்பித்தள்ளிவிட்டாராம். அதன் பிறகே சபாநாயகர் முன் தர்ணா, அவையிலிருந்து வெளிநடப்பு என வேகம் காட்டியதாம் துணிவானவர் தரப்பு!

அ.தி.மு.க கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், ‘அதே இடத்தில் மேடை போட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மேடை போட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டார் குமரகுரு. இருந்தாலும், கட்சித் தலைமையிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று அதற்கு முன்பாக எடப்பாடி தரப்பிடம் பேசினாராம் குரு.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு

“ஒண்ணு நாவடக்கமாப் பேசணும்... இல்லைன்னா அதனால ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கணும். இப்பிடி ரெண்டுமே இல்லாம எதுக்குப் பேசி, கட்சி மானத்தைக் கப்பலேத்துறீங்க...” என்று கடுகடுத்ததாம் தலைமை. `ஒரு கூட்டத்துல பேசிட்டு ரெண்டு பேர்கிட்ட மன்னிப்புக் கேட்க வேண்டியதாப்போச்சே...’ என்று மனம் வெதும்பிப்போயிருக்கிறாராம் குமரகுரு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/aPvfdYV

Post a Comment

0 Comments