தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்களும் முரண்பாடுகளும், வார்த்தைப்போரும் நீடித்துவருகின்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆளுநர் ரவி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறார்.
சனாதன தர்மம் போன்ற கருத்துகளைப் பேசி, தொடர்ச்சியாக சர்ச்சையைக் கிளப்பிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சாதியப் பதற்றம், தீண்டாமை போன்ற பிரச்னைகளைக் கையிலெடுத்திருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சாதிப்பாகுபாடு போன்ற பிரச்னைகளை அவர் பேசினார்.
அதில், ``தமிழ்நாட்டில் சாதியப்பாகுபாடுகள் அதிகரித்துவருகின்றன. இந்தச் சாதிய வன்கொடுமைகள் எந்த அளவுக்குத் தலைதூக்கியிருக்கிறது என்றால், வேங்கைவயலில் குடிநீரில் மலத்தைக் கலக்கும் அளவுக்கும், நாங்குநேரியில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டும் அளவுக்கும் சாதிய வன்கொடுமை அதிகரித்திருக்கிறது" என்றார் ஆர்.என்.ரவி.
மேலும், ``பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் சாதி அடிப்படையில் கயிறுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான கலாசாரம்... பஞ்சாயத்துத் தலைவராக வெற்றிபெற்ற இந்துமதி என்ற பெண்ணால் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரே காரணம், அவர் பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுதான்" என்று ஆர்.என்.ரவி பேசினார்.
இதற்கு முன்பாகவும் பல்வேறு தருணங்களில் தமிழகத்தில் நிலவும் சாதிப்பாகுபாடுகள் பற்றி ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். தஞ்சாவூர் அருகே தமிழ் சேவா சங்கம் என்ற அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ``இளைஞர்கள் கையில் சாதிக்கயிறு அணிவதை தேசத்தில் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டில்தான் அதைப் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் கோயில்களுக்குள் தலித் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குடிநீரில் மலத்தைக் கலக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் சக மாணவரால் தாக்கப்படுகிறார். இது போன்ற செய்திகள் நம் அண்டை மாநிலங்களில் நடப்பதாக நாம் படித்ததில்லை. சமூகநீதி என்ற பெயரில் இங்கு பெரும் அரசியல் நடக்கிறது. ஆனால், சாதியின் பெயரால் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இது வெட்ககரமானது" என்றார்.
பள்ளி மாணவர்கள் சாதிக்கயிறு கட்டும் விவகாரத்தைப் பொறுத்தவரை, சாதிக்கயிற்றை ஆதரிக்கும் பா.ஜ.க தலைவர்களுக்குத்தான் ஆளுநர் முதலில் அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி மாணவர்கள் சாதிக்கயிறு கட்டுவதற்கு எதிராக 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள் சாதிக்கயிறு கட்டக் கூடாது என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்தது.
ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக முதன்முதலில் கொந்தளித்தவர் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. ஹெச்.ராஜா போன்றவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அந்த உத்தரவையே பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றது. தற்போது, மாணவர்களிடையே சாதிக்கயிறு கட்டும் பழக்கம் தொடருவதற்கு அதுதான் காரணம்.
தற்போது சாதிக்கயிறுக்கு எதிராக ஆளுநர் பேசிவரும் நிலையில், அதைக் கண்டிக்காமல் ஹெச்.ராஜா மௌனம் காப்பது ஏன் என்பது தெரியவில்லை. அதேபோல, அண்டை மாநிலங்களில் சாதிப்பாகுபாடுகள் இல்லை என்ற தொனியில் ஆளுநர் ரவி பேசியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சாதி நோயால் ஒட்டுமொத்த இந்தியச் சமூகமும் பீடித்துக்கிடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே சாதிப்பாகுபாடும், தீண்டாமையும் நிலவுகின்றன என்று ஆர்.என்.ரவி பேசுவது நகைப்புக்குரியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழ்நாட்டில் நிலவும் சாதிப்பாகுபாடுகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் இத்தகைய கருத்துக்கு, தி.மு.க முகாமிலிருந்து கடும் எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன. அமைச்சர் பொன்முடி இந்த விவகாரத்தில், ``தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை என்றும் சாதியப்பாகுபாடுகள் இருக்கின்றன என்றும் பேசியிருக்கிறார் ஆளுநர். அவர் பீகார் மாநிலத்துக்குச் சென்று சாதியப்பாகுபாடுகள் குறித்துப் பேச வேண்டும். சாதியப்பாகுபாடுகள் தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. அவற்றைத் தவிர்த்து ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிலை நிறுத்துவதற்கு முயற்சி செய்துவருகிறார் நம் முதல்வர் ஸ்டாலின்" என ஆளுநரைச் சாடியிருந்தார்.
அதேபோல அமைச்சர் துரைமுருகன், ``ஊராட்சிமன்றத் தலைவர் பதவியேற்பு தொடர்பான ஆளுநரின் பேச்சு, கண்டனத்துக்குரியது. உயர் நீதிமன்ற உத்தரவைக்கூடப் படிக்காமல் ஆளுநர் பொறுப்பிலிருக்கும் ரவி, பட்டியலினத் தலைவர் பதவியேற்பு பற்றி அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பரப்புரை செய்வதா... சிறப்பாகச் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டிவரும் திராவிட மாடல் அரசை விமர்சிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உண்மைக்கு மாறான பேச்சுகளை ஆளுநர் தவிர்க்க வேண்டும். அரசியல் பேச வேண்டும் என்றால், அரசியல் தலைவராக மாறிக்கொண்டு ஆளுநர் இத்தகைய கருத்தைச் சொல்லலாம்" என ஆளுநரைக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். திருமாவளவனும் இந்த விவகாரத்தில், ஆளுநர் ரவிக்குத் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேங்கைவயலில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் கடந்தும்கூட, குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தனது இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், `காவல்துறையின் விசாரணை மிகவும் மந்தமாக இருக்கிறது' என்று அறிக்கையில் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான், தீண்டாமை போன்ற பிரச்னைகளை ஆளுநர் ரவி கையிலெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/nWtS1jQ
0 Comments