அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் பின்னணியிலேயே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது என்கிற முடிவை அ.தி.மு.க எடுத்தது என்கிற செய்திகள் அடிபடுகின்றன.
ஆனால், பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகியதற்கு அண்ணாமலையின் அடாவடிப் பேச்சுதான் காரணம் என்றரீதியில்தான் அ.தி.மு.க-வினர் வெளியே காரணம் சொல்லிவருகிறார்கள்.
கூட்டணி முறிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமியே அறிவித்த பிறகும், அது குறித்து பா.ஜ.க தரப்பினர் இன்றுவரை வாய் திறக்கவில்லை. கூட்டணி முறிவுக்கு ‘உள்’ காரணங்கள் எதுவாக இருந்தாலும், அண்ணாமலை என்கிற ‘வெளி’க் காரணம்தான் இந்த விவகாரத்தில் முக்கியமாக அடிபடுகிறது.
முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி அண்ணாமலை பேசிய உண்மைக்கு மாறான பேச்சுதான் அ.தி.மு.க தலைவர்களைக் கொந்தளிக்கவைத்தது என்றும், கூட்டணி முறிவுக்கு அதுதான் காரணம் என்றும் பேசப்பட்டுவந்த நிலையில்தான், பா.ஜ.க-வின் தேசியத் தலைமையின் கோபத்துக்கு அண்ணாமலை ஆளாகியிருக்கிறார் என்ற செய்திகள் பரபரக்க ஆரம்பித்தன.
டெல்லிக்குச் சென்று பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்திருக்கிறார் அண்ணாமலை. பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரின் இல்லத்தில் சந்தித்திருக்கிறார் அண்ணாமலை. அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தால்தான், பா.ஜ.க-வுக்கு லாபம் என்ற எண்ணம்கொண்ட நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க கூட்டணியை முறித்துக்கொள்ளும் அளவுக்கு நடந்துகொண்டது ஏன் எனக் கேள்விகளை அண்ணாமலையிடம் அவர் எழுப்பினார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அண்ணாமலையின் பதில்களில் தேசியத் தலைமைக்கு திருப்தியில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
தற்போது, தமிழ்நாடு பா.ஜ.க குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகில இந்தியத் தலைமையிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. டெல்லிக்குச் சென்ற அண்ணாமலை தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும்கூட, அவர் பெரிதாக வாய் திறக்கவில்லை.
அ.தி.மு.க-வுடனான கூட்டணி பற்றி பா.ஜ.க மேலிடம் முடிவு எதையும் எடுக்காத நிலையில், அண்ணாமலையிடம் வாயைத் திறக்கக் கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவு போட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அ.தி.மு.க பற்றி பா.ஜ.க நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாகப் பேச வேண்டாம் என்று தேசியத் தலைமை அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
‘அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்குப் பலன் கிடைக்கும். எனவே, ஒரு மாதத்துக்குப் பிறகு அ.தி.மு.க-வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடிவெக்கலாம்’ என்று பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியதால், தேசிய அளவில் பா.ஜ.க-வின் இமேஜுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பா.ஜ.க தேசியத் தலைமை கவலையுடன் பார்க்கிறது. சமீபத்தில் தெலங்கானாவுக்குச் சென்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதாக சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் (இப்போது பி.ஆர்.எஸ்) கேட்டது. அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம்’ என்றார்.
உடனடியாக அதற்கு பதிலடி கொடுத்த பி.ஆர்.எஸ் தரப்பினர், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஏன் அந்தக் கூட்டணியில் சேரப்போகிறோம்?’ என்று கூறியிருக்கிறார்கள். இந்தப் போக்கு பா.ஜ.க தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், எனவே, மீண்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க இறங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வழக்கமான தன் ‘ஸ்டைலில்’ அண்ணாமலை பேச ஆரம்பித்தால், நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று பா.ஜ.க மேலிடம் கருதுவதால் அண்ணாமலையின் மௌன விரதம் தொடரும் என்றே பா.ஜ.க வட்டாரம் தெரிவிக்கிறது. நடப்பவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/IX0sqlG
0 Comments