இழிவாக விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்... `துச்சாதன கட்சி’ எனக் கண்ணீர்விட்ட அமைச்சர் ரோஜா!

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று, 1999-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய ரோஜா, தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து உட்கட்சிப்பூசல் காரணமாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு 2014-ல் முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்துக்குள் நுழைந்து, தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றிபெற்று கடந்த ஆண்டு மாநில சுற்றுலாத்துறை அமைச்சரானார். இப்படியிருக்க அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டார்.

பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி - தெலுங்கு தேசம் கட்சி

இத்தகைய சூழலில், சந்திரபாபு நாயுடுவைப் பல மாதங்களாகக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த அமைச்சர் ரோஜாவை, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்பவர் இழிவாக விமர்சித்தார். அதாவது, அமைச்சர் ரோஜா தவறான படங்களில் நடித்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவை விமர்சிப்பதை அவர் நிறுத்தாவிட்டால், அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து, இத்தகைய பேச்சால் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி, திங்களன்று கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், தன்மீதான இந்த இழிவான விமர்சனத்தால் அமைச்சர் ரோஜா கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதியில் நேற்று முன்தினம் தனது வீட்டில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரோஜா, ``பண்டாருவின் பேச்சைக் கேட்ட அவரின் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் அவரை அறைந்து, தங்களுக்கு எதிராக வேறு யாராவது இவ்வாறு கூறினால் தங்களுக்கு எப்படியிருக்கும் என அவரிடம் கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள், தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களை மட்டுமே பெண்கள், மற்றவர்கள் அப்படியில்லை என்று நினைக்கிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடு. 10 ஆண்டுகள் தெலுங்கு தேசம் கட்சிக்காக நான் பணியாற்றியபோது, ஏன் அவர் என்னுடைய குணத்தைப் பற்றி கேள்வி கேட்கவில்லை... அந்தக் கட்சியில் உழைத்ததற்காக இப்படி எனக்குத் திருப்பித் தருகிறாரா... தெலுங்கு தேசம் கட்சிக்காக நான் செய்த பணிகள் குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் கேளுங்கள்.

அமைச்சர் ரோஜா

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், அவரின் குடும்பத்தினரும் என்னை ஆதரித்தனர். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியினர் என்னை துஷ்பிரயோகம் செய்தனர். சட்டமன்றத்துக்குள்ளேயும், வெளியேயும் என்னை மீண்டும் மீண்டும் அவர்கள் சித்ரவதை செய்கிறார்கள். என்.டி.ஆருக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சி தற்போது, தெலுங்கு துச்சாதன கட்சியாக மாறிவிட்டது. இனியும் இது மீண்டும் நடந்தால் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பண்டாரு மீது வழக்கு தொடுத்து, உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, அவதூறு வழக்கு தாக்கல் செய்து, பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வேன்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/wN30lAx

Post a Comment

0 Comments