Kannur Squad: படத்தின் செகண்ட் ஹீரோ டாடா சுமோ; இது என்ன அப்படிப்பட்ட அப்பாடக்கர் காரா?!

மலையாளப் படங்களின் ஸ்க்ரீன் ப்ளேவைப் பற்றிக் குறை சொன்னால்… அவர்களைக் கத்துக்குட்டிகள் என்று தைரியமாகச் சொல்லலாம். லேட்டஸ்ட் ரிலீஸான ‘கண்ணூர் ஸ்குவாட்’ (Kannur Squad) படமும் அப்படித்தான்.

‘ப்ப்பாஆ’ என்கிற தொனியிலேயே நம்மைக் கண்ணிமைக்காமல் வைத்திருக்கிறார்கள் படம் முழுக்க. மம்முட்டியைத் தாண்டி இன்னொரு ஹீரோவையும் அதில் அப்ரிசியேட் பண்ணத் தோன்றுகிறது.. அது நடிகர் இல்லை; ஒரு கார். அது டாடா சுமோ. 

படத்தின் ஓப்பனிங்கிலேயே மம்முட்டியின் விரல்கள் சுமோவின் பாடியில் தாளமிடுவதில் தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நமது ரோலர்கோஸ்ட்டர் ரைடு அனுபவம். ‘ஃப்ளைட்ல போற அளவுக்கு நம்ம கேரளா போலீஸ் டிப்பார்ட்மென்ட் இன்னும் வளரலையாம்;

Kannur Squad

நமக்கு எதுக்கு ஃப்ளைட்… எத்தனை கிமீயா இருந்தா என்ன… எட்றா சுமோவை’ என்று மும்பையில் இருந்து ஃபைஸாபாத்துக்கு 1,500 கிமீ–யைச் சாலை வழியாகவே பறப்பதாகட்டும்… ஒட்டுமொத்த ஊரே கொடூரமாகத் தாக்கும்போதும் 5 காவல்துறை அதிகாரிகளையும் குண்டடி பட்டு, கம்படி பட்டுக் காப்பாற்றும் கெத்தாகட்டும்… அட க்ளைமாக்ஸ் சீனில் இந்திய – நேபாளம் பார்டரில் ஒரு ரிசர்வ் ஃபாரஸ்ட்டின் அதலபாதாளத்தில் சுமோ தலைகுப்புறக் கவிழ்ந்து கிடக்கும்போது, ‘கண்ணூர் ஸ்குவாட்’ அதிகாரிகள் கண்ணீர்த் துளிகளுடன் டாடா சுமோவுக்கு டாடா சொல்லும்போது… நமக்கும் கண்கள் வியர்க்கின்றன. 

படம் முடிந்ததும், ‘இப்படியெல்லாமா சின்சியர் அதிகாரிங்க போலீஸ்ல இருந்திருக்காங்க’ என்று கூஸ்பம்ப் ஆகிக் கிளம்பும் அதே நேரத்தில், சில ஆட்டோமொபைல் எந்த்துக்களுக்கு இப்படியும் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. ‘‘ஏண்டா, அந்த அடி அடிக்கிறானுங்க. டாடா சுமோ என்ன அப்படிப்பட்ட காரா!’’

டைரக்டர் ரோபி வர்கீஸ் ராஜ், இந்தப் படத்துக்கு ‘டாடா சுமோ’ காரைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் – அந்த க்ரைம் சீன் நடந்த காலகட்டமாக இருந்திருக்கலாம். இன்னொரு விஷயம் – இது உண்மைச் சம்பவம் என்பதால், அப்போதைய நிஜ கண்ணூர் ஸ்குவாட் டீம், நிஜமாகவே இந்தக் காரைத்தான் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். 

Tata Sumo

ஓகே! இந்த நேரத்தில் டாடா சுமோ பற்றிய ஒரு சின்ன நாஸ்டால்ஜியாவைத் தட்டி விடலாம்! 

சுமோ என்றால் சட்டுனு நீங்கள் என்ன நினைப்பீர்கள்! தொங்கிப் போன பெருந்தொப்பையும், தொள தொள தொடைகளுமாய் பல்க்கியாகச் சண்டை போடும் ஜப்பான் மல்யுத்த வீரர்களைத்தானே! அந்தப் பெயரைத்தான் டாடா மோட்டார்ஸ் இந்தக் காருக்கு வைத்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!

உண்மையில் இந்த கார் உருவாவதற்குப் பெயர்க் காரணமாக இருந்தவர், டாடா மோட்டார்ஸின் அப்போதைய நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்த சுமந்த் மூல்கோக்கர் (Sumant Moolgaokar) என்பவர்தான். இவரின் இந்த இரண்டு பெயர்களையும் இணைத்துத்தான் (SuMo) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர் சாதாரண ஆளில்லை; இவர் பத்மபூஷன் விருது பெற்றவர். சரி; அதற்காகவெல்லாமா ஒரு காருக்குப் பெயர் வைக்க முடியும்!

டாடா மோட்டார்ஸின் உயர்மட்ட அதிகாரிகள் மதிய உணவை ஒன்றாக அருந்துவதுதான் வழக்கம். ஆனால், சுமந்த் மட்டும் லஞ்ச் டயத்தில் எஸ்கேப் ஆகிவிடுவாராம். எம்டி என்பதால், ‘நம்ம கூட சேர்ந்து சாப்பிட ப்ரெஸ்டிஜ் பார்க்குறாருபோல’ என்று அவரைப் பற்றிப் பேச்சு அடிபட ஆரம்பித்தும், அவர் லஞ்ச் நேரத்தில் எஸ்கேப் ஆவதை விடவில்லை. ஒரு தடவை அவருக்குத் தெரியாமலேயே கண்காணித்துப் பார்த்தார்களாம் சில அதிகாரிகள். சுமந்த்தின் கார், நேராக நெடுஞ்சாலையில் இருக்கும் தாபாவின் நின்றது. தாபாவுக்கு வரும் லாரி டிரைவர்களுக்கு இடையே லாரி ஓட்டுதலைப் பற்றியும் லாரிகளில் உள்ள நிறை – குறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே லஞ்ச்சைச் சாப்பிட்டாராம் சுமந்த்.

Sumant Moolgaokar

டாடா மோட்டார்ஸில் அப்போது ட்ரக்குகள் தயாரிப்புதான் மார்க்கெட்டையே தூக்கி நிறுத்தியது. அதனால், ட்ரக்குகள் வெற்றி பெற வேண்டும் என்றால், லாரிகளில் என்ன குறைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து அவற்றைக் களைய வேண்டும் என்கிற அக்கறையும், பணியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டாலும்தான் அவரின் இரண்டு பெயர்களின் முதல் 2 எழுத்துகளையும் இணைத்து SuMo என்று அந்தத் தயாரிப்புக்கு வைத்ததாம் டாடா மோட்டார்ஸ்.

Sumant Moolgaokar

1991–ல் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ரத்தன் டாடாதான் இந்தப் பெயரைச் சூட்டியவர்.

டாடா சுமோவைப் பற்றிக் கேட்டால், 90’ஸ் கிட்ஸ்க்கெல்லாம் புல்லரிக்க ஆரம்பித்துவிடும். 1994–ல்தான் முதன் முதலாக டாடா சுமோ லாஞ்ச் ஆனது. செக் போஸ்ட்டிலும் சரி; சும்மா நெடுஞ்சாலையிலும் சரி – டாடா சுமோ ஒன்று வந்து நின்றால்,  சாதாரண மனிதர்களின் வேட்டி தானாக மரியாதையில் இறங்கும் என்பார்கள். அட, காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள் என்று டாடா சுமோ அப்போதைய ஆதிக்கத்தின் அடையாளம்.

Sumo and Bolero in Fight Scenes

இதற்கு அந்தக் காரின் ஸ்டைலும் கட்டுமானமும் கிண்ணென்று இருந்தால்தான் சாத்தியம். லாஞ்ச் ஆன மூன்றே ஆண்டுகளில், அதாவது 1997–ல் 1 லட்சம் சுமோக்கள் விற்பனையாகின என்றால், அது அந்தக் காலத்தில் இமாலய வெற்றி. 

காவல்துறை அதிகாரிகள் இதைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் – இதுதான் அப்போதைய ரியர் வீல் டிரைவ் கொண்ட எஸ்யூவி. எப்படிப்பட்ட ஆஃப்ரோடுகளிலும் கிருட் கிருட் என ஏறும் தன்மை கொண்டது. அதுவும் கைதிகளை அடைத்துக் கொண்டு போகும் அளவுக்கு இடவசதி கொண்ட 10 சீட்டர் கார் என்றால், எந்தக் காவல்துறைக்குத்தான் பிடிக்காது. இதைவிட ராணுவத்தினருக்கு 4வீல் டிரைவ் சுமோவெல்லாம் தயாரித்து வழங்கியது டாடா. அப்போதே ஆஃப்ரோடு செய்யும்போது ட்ராக்ஷனைக் கட்டுப்படுத்தும் செல்ஃப் லாக்கிங் டிஃப்ரன்ஷியல் கன்ட்ரோல் போன்ற எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்களையெல்லாம் புகுத்தி இதைத் தயாரித்தது டாடா. 

காவல்துறை, ராணுவத்தினர் மட்டுமில்லை; சினிமாக்காரர்களுக்கும் சுமோ பிடித்துப்போன ஒரு வாகனம். ஆக்ஷன் படங்கள் என்றால், சுமோ இல்லாமல் இருக்காது. ‘அயன்’ என்றொரு படத்துக்காக, கே.வி.ஆனந்த் டீம், ‘பழைய சுமோ கார் இருந்தா சொல்லுங்களேன்; ஃபைட் சீனுக்குத் தேவைப்படுது’ என்று என்னிடமே கேட்டார்கள். இன்னொரு சினிமா டீம் இப்படிக் கேட்டது: ‘‘அண்ணே, பொலேரோவையும் சுமோவையும் மோத விடணும்; எதுனா பழைய சுமோவும் பொலேரோவும் இருந்தா சொல்லுங்க!’’

Tata Sumo back

எஸ்யூவி என்றால், கட்டுமானம்தான் முக்கியம். அதற்கு Body of Frame தான் சாத்தியம். அப்படி 88–களில் வெளிநாடுகளில் பிரபலமான டெல்கோலின் (Telcoline) எனும் எஸ்டேட் காரின் கட்டுமானமான X2 எனும் ப்ளாட்ஃபார்மில் இதை ரெடி செய்திருக்கிறார்கள். டெல்கோலினின் அதே 1,948 சிசி டீசல் இன்ஜின்தான் சுமோவிலும். 

அந்தக் காலத்தில் கில்லி மாதிரி சொல்லியடித்துக் கொண்டிருந்த ஓல்டு ஃபேஷன் மஹிந்திரா எம்எம் சீரிஸ் ஜிப்புகளுக்கெல்லாம் டஃப் கொடுத்தது சுமோ. காலப்போக்கில் சுமோவை அப்படியே சும்மா விட்டுவிடக் கூடாது என்று டாடாவும் ஓவர்டைம் பார்த்தது. சுமோ ஸ்பேசியோ, சுமோ விக்டா, சுமோ கோல்டு, சுமோ கிராண்டே என்று பல பெயர்களில் சுமோ வந்தது. இப்போதும்கூட தேனி, தேக்கடி, கம்பம், மேகமலை, மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் 10–க்கும் மேற்பட்ட மலைவாழ்ப் பணியாளர்களை அடைத்துக் கொண்டு மலையேறும் பழைய டாடா சுமோ விக்டாக்களை, சுமோ ஸ்பேசியோக்களை, சுமோ கோல்டுகளைப் பார்க்கும்போது, புல்லரிக்கத்தான் செய்யும்.

சுமோவை ஓட்டுதலுக்கான கார் என்று சொல்லலாம்; கரடுமுரடான பாதைகளில் போகக்கூடிய எஸ்யூவி என்று சொல்லலாம்; கிண்ணென்ற அண்ணன் என்று சொல்லலாம். ஆனால், அதற்காக டாடா சுமோவை ஒரு பாதுகாப்பான கார் என்று சொல்லிவிட முடியாது. எடை அதிகமாக இருந்தால், ஒருவரை உறுதியானவர் என்று கருதிவிட முடியாதுதானே! அப்படித்தான் சுமோவும். இந்த 2 டன் எடை கொண்ட கார், நல்ல உலோகத்தால் செய்யப்பட்டாலும், அடிபட்டால் நமக்கே ஆப்பாகக் கூடிய விஷயங்களும் நடக்கும். 

Tata Sumo

ஆனால் பெருமைக்காகச் சொல்லவில்லை; சுமோவை ஓட்டிவிட்டு ஒருவர் வேறொரு எஸ்யூவியை மிகவும் மனம் லயித்து ஓட்டியதாகப் பார்த்ததில்லை. சுமார் 25 ஆண்டுகளாக எஸ்யூவி செக்மென்ட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சுமோவை, 2019 ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் அதன் தயாரிப்பை நிறுத்திவிட்டபோது, எப்படி மனம் கனத்ததோ… ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் க்ளைமாக்ஸில் கவிழ்ந்து கிடக்கும் சுமோவைப் பார்த்தபோது, அதே போன்றதொரு கனத்த ஃபீலிங் வந்தது – எனக்கு மட்டும்தானா தெரியவில்லை!

பொதுவாக, கார்களை ஃபைட் சீனுக்குப் பயன்படுத்தி – அடித்து நொறுக்கப் பயன்படுத்தும் திரைப்படங்களுக்கு மத்தியில்... ஒரு காரைப் படம் முழுவதும் காட்டி நம்முடன் பயணிக்க வைத்து, நம்மையும் பயணிக்க வைத்து...

க்ளைமாக்ஸில் ஃபீல் பண்ண வைப்பதெல்லாம் வேற ரகம் பாஸ்! ஒரு தடவை Kannur Squad படம் பார்த்துட்டு வாங்க; உங்களுக்கே என்னோட ஃபீலிங் புரியும்.


from Latest news https://ift.tt/c1agZwS

Post a Comment

0 Comments