ICC World Cup 2023: உலகக்கோப்பை மீது மட்டுமே கண்வைத்து அம்பை எய்தும் இந்தியா - விரிவான அலசல்

மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமோ என்ற பயம் ஓயாதது போல் இந்தியா தனது மூன்றாவது உலகக்கோப்பையை எப்போது வெல்லுமென்ற ஏக்கங்களும் அடங்கவே இல்லை.

தொடருக்கான கவுண்ட் டவுன் ஒருபக்கம் தொடங்கிவிட்ட நிலையில் சகல அணிகளும் உலகக்கோப்பையை மையமாக வைத்து சுழல கடந்த இரு படையெடுப்பில் தவறவிட்டதை இம்முறை ஆக்ரமித்துவிடும் உறுதியுடன் இந்தியாவும் களமிறங்குகிறது.

களம் இந்திய எல்லைக்கு உட்பட்டதெனினும் இந்தியப்பாசறை சகலவித ஆயுதங்களுடனும் கேடயங்களுடனும் ஆயத்தமாயுள்ளதா? 2019 உலகக்கோப்பைக்குப் பின் நடைபெற்ற 21 ஒருநாள் தொடர்களில் 15-ஐ வென்றிருப்பது இந்தியாவுக்கு சாதகமா? அதுவும் சொந்த மண்ணில் ஆடிய 10 தொடர்களில் 9-ல் வெற்றி என்பது இந்தியா தனது குகையில் எத்தனை வல்லமை படைத்தது என கட்டியம் கூறுகிறதா ?

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023

பலம்:

சீட்டுக்கட்டு விளையாட்டில் எடுத்த எடுப்பில் ரம்மி சேராவிட்டாலும் தேவையான ஒவ்வொரு கார்டும் ஒவ்வொரு சுற்றில் வந்து சேர்ந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை ஆசியக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்கள் பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியத்தரப்புக்கு அளித்துள்ளன. சுப்மன் கில்லின் திறன் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. கடந்த ஓர் ஆண்டில் 26 போட்டிகளில் 1418 ரன்களை 64.5 ஆவரேஜோடு குவித்துள்ளார். இரட்டை சதம்கூட அநாயசமாக வந்தது. சந்தேகமே மற்ற வீரர்கள் குறித்ததுதான்.

காயத்திலிருந்து மீண்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸின் பேட்டுகள் ரிதத்தைக் கண்டறியுமா, சீனியர்களான கோலி, ரோஹித் பழைய தாக்கத்தை மீட்டுருவாக்கம் செய்வார்களா என்பதுதான் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் கடந்த இருதொடர்கள் அனைவரையும் டிராக்கில் மீண்டும் நிலைநிறுத்தி விட்டன என்பது இந்தியாவிற்கான அனுகூலம்.

2019 - 2023 காலகட்டங்களில் இந்திய மிடில்ஆர்டர், ஸ்பின்னுக்கு எதிராக 51.6 ஆவரேஜோடு ரன்களைக் குவித்து மற்ற அணிகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதிலும் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவின் ஆவரேஜ் வெறும் 46.4 என்பதே சொல்லும் எந்தளவு ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதனை. முதல் ஐவரில் நால்வர் 40 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து அதில் இருவர் நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் பெரிய இன்னிங்க்ஸை ஆடிவிட்டாலும் ஃபினிஷிங் டச்சினை பாண்டியா கொடுப்பார்.

36 ரன்கள் என்னும் பாண்டியாவின் பேட்டிங் ஆவரேஜ் மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு எதிரான அவரது ஆசியக்கோப்பை தொடர் இன்னிங்ஸ் போல சமீபமாக தோனி பாணியிலான கேல்குலேட்டிவ் இன்னிங்க்ஸ் ஆடும் முறையும் நம்பிக்கை அளிக்கிறது. பிரதான பௌலரின் சாயலும் பாண்டியாவிடமிருந்து அவ்வப்போது வெளிப்படுகிறது. 2022-க்குப் பின்பு அவரது பௌலிங் ஆவரேஜ் முன்பு இருந்ததற்கு கிட்டத்தட்ட சரிபாதியாகக் குறைந்து 21.95-ஐ எட்டியுள்ளதும் அதையே நிரூபிக்கிறது. அஹ்மதாபாத் போன்ற களங்களில் கொஞ்சமாக பந்து ஸ்விங் ஆனாலும் பவர் பிளேவுக்குள்ளேயே பாண்டியா எதிரணிக்கு பேராபத்தானவராக மாறுவார்.

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023

இந்திய பௌலிங் பேட்டிங்கை விடவும் வலுமையாக உள்ளது. பல மாதங்கள் இடைவெளி விட்டதே தெரியாத அளவு பும்ராவின் பௌலிங் அதே தாக்குதல் அணுகுமுறையில் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் முதல் ஸ்பெல்லில் ரன்களைக் கசியவிட்டாலும் இரண்டாவது ஸ்பெல்லில் ஸ்ப்ரிங் போல மீண்டு வந்தது சாம்பியன் பௌலருக்குரிய அம்சம். ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை முற்றுகையிட்டிருக்கும் சிராஜின் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி ஸ்பெல் சொல்லும் எந்தளவு அவர் ஆபத்தானவர் என்பதை. ஆஸ்திரேலிய தொடரில் ஷமியின் பௌலிங்கும் "நானும் இருக்கிறேன்" என நம்பிக்கை அளிக்கிறது. சமயத்தில் இரு பிரதான வேகப்பந்து வீச்சாளர்களோடு இந்தியா களமிறங்கினாலும்கூட இதுபோன்ற நெடுந்தொடர்களில் பேக்அப் ஆப்சன்கள் அதுவும் குவாலிட்டி பௌலர்களைக் கொண்டிருப்பது பெரும்பலம்.

கடந்த ஓராண்டில் 20 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வெறித்தனமாக வீழ்த்தியுள்ளார் குல்தீப். இந்தியக்களங்கள் + குல்`தீ'ப்பின் ஃபார்ம் எதிரணிக்கான அறைகூவல். ஒரு பிரதான ஆஃப் ஸ்பின்னர் இல்லையென்ற குறையையும் இறுதி நிமிடத்தில் சேர்க்கப்பட்ட அஷ்வின் தீர்த்துள்ளார். 2011 உலகக்கோப்பையில் தோனி பயன்படுத்தியது போல ஸ்லோ பிட்ச்களில் அஷ்வின் அணிக்கான ஆயுதம். 4.87 என்னும் எக்கானமியோடு வலம்வரும் ஜடேஜா ரன்களைக் கட்டுப்படுத்தி நெருக்கடி தந்து அடுத்த பௌலருக்கு விக்கெட் வீழ்த்துவதற்குரிய வாயிலைத் திறப்பவர். தாக்கூரோ வேரியேஷன்களோடு சமயத்தில் பார்ட்னர்ஷிப் பிரேக்கராக வலம் வருபவர். ஆக பேட்டிங் மற்றும் பௌலிங்கைப் பொறுத்தவரை ஃபுல் மீல்ஸ் போல எல்லாத் திக்கிலும் அணி நம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கிறது.

பலவீனங்கள் :

இடக்கை - வலக்கை காம்பினேஷன்தான் எதிரணியின் வியூகங்களை உடைக்க வல்லது. ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்ச்சிக்கு வேகத்தடை இட்டதே இஷானின் வருகைதான். அப்படியிருக்க மற்ற அணிகளில் பெரும்பாலும் ஓர் இடக்கை வேகப்பந்துவீச்சு வீச்சாளராவது உள்ள நிலையில் டாப் 6-ல் இடக்கை பேட்ஸ்மேன்கள் யாருமே இல்லாமல் அணி களமிறங்குகிறது. இது எதிரணி கேப்டன் மற்றும் பௌலிங் யூனிட்டின் வேலையை சுலபமாக்கும்.

ஜடேஜாவின் முப்பரிமாணத்தில் பௌலிங் மற்றும் ஃபீல்டிங் அபாரம்தான். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் கவலையளிக்கிறது. 2022-க்குப்பின் அவரது ஸ்ட்ரைக்ரேட் சராசரியாக 65-க்குக் கீழேயே உள்ளது. 35 ஓவர்களுக்கு மேல் வந்து ரன்ரேட்டைக் கூட்டவேண்டிய பொறுப்பு அவருடையது. அப்படியிருக்க இந்த ஸ்லோ பேட்டிங் அணியின் இறுதிக்கட்ட ரன்குவிப்புக்கு கடிவாளமிடும். அதுவும் சேஸிங்கில் இதுவே தேவையற்ற பதற்றத்தை மறுமுனையில் உள்ள வீரருக்குள்ளும் புகுத்தும்.

இந்திய வீரர்களின்

ஸ்ரேயாஸ் இணைந்ததால் அணியில் முதல் ஏழு இடங்களில் ஆடும் பேட்ஸ்மேன்கள் இறுதி செய்யப்பட்டாலும் எட்டாவது இடம் மட்டும் சுழற்சி முறையில் மாறுதலுக்குட்பட்டிருப்பது பலவீனமே. அக்ஸர் இல்லாதது பின்னடைவாக உள்ள நிலையில் தாக்கூர் அல்லது அஷ்வின் என களத்திற்கேற்ப யாரோ ஒருவர் களமிறங்குவர். இது அணியின் நிலைப்புத்தன்மையை சற்றே அசைத்துப்பார்க்கும்.

இவை தவிர்த்து ஃபீல்டிங் குறித்தும் இந்தியா சற்றே கவலைகொள்ள வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் நடந்துள்ள போட்டிகளில் கைக்கு வரும் நான்கில் ஒரு கேட்சை இந்திய ஃபீல்டர்கள் தவறவிட்டுள்ளனர் என்னும் புள்ளிவிபரம் சற்றே கவனம் கொள்ளவேண்டியதே.

வாய்ப்புகள் :

இந்தியாவிலே போட்டி நடைபெறுவது இந்திய அணிக்கு 12 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வெல்வதற்கு உரிய மிகப்பெரிய வாய்ப்பினை உண்டாக்கி உள்ளது. அதிலும் Customised பிளான் போல எதிரணி தனது பலத்தை பயன்படுத்த முடியாதவாறும், பலவீனங்கள் குறி வைக்கப்படுமாறும் இந்தியப் போட்டிகள் நடக்கும் களங்கள் அமைந்துள்ளன. Baz Ball-ஐ உருள விடமுடியாதவாறு இங்கிலாந்து ஸ்லோ பிட்சான லக்னோவில் இந்தியாவை எதிர்கொள்கிறது. அஹ்மதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடவிருப்பதும் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவே கைகொடுக்கும் பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்தான். சென்னையில் அஷ்வினை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு குறிவைக்கலாம். தென்னாப்பிரிக்காவின் பலமான வேகப்பந்துவீச்சும் ஈடன் கார்டனில் வலுவிழக்கும். ஆக லீக்சுற்றில் பெரிய அணிகளை வீழ்த்துவதற்கான மேடை இந்தியாவுக்கு வலுவாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

கில் ஏற்கனவே சச்சின், கோலிக்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டு விட்டாலும் அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பினையும் அவருக்கு இந்த உலகக்கோப்பை உருவாக்குகிறது. தொடரின் லீடிங் விக்கெட்டேக்கராகும் வாய்ப்பு குல்தீப் மற்றும் சிராஜ் இருவருக்குமே இருக்கிறது.

அச்சுறுத்தல்கள் :

இந்தியாவை சற்றே அச்சுறுத்துவது பும்ரா, ஸ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதுதான். கடந்த இரு தொடர்களில் ஆடி இழந்த ஃபார்மை அவர்கள் மீட்டெடுத்து இருந்தாலும் மறுபடியும் காயம் ஏற்பட்டு விடுமோ என்ற ஒரு சின்ன நெருடல் இருந்து கொண்டேதான் உள்ளது. நெடுந்தொடர் என்பதுவும் பல கிலோமீட்டர்கள் களங்களுக்கு இடையே பயணப்பட வேண்டுமென்பதுவும் வீரர்களைக் களைப்புற செய்யும் என்பதுவும் கூடுதல் பயங்காட்டுகிறது. `Home Advantage Is Overrated' என சொல்லுமளவிற்கு இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புடனான ஓட்டப்பந்தயத்திலும் இந்தியா வெல்லவேண்டும். அதுவும் பல அணிகளின் வீரர்களும் இங்கே ஐபிஎல்லில் ஆடிப் பழக்கப்பட்டு இருப்பதால் இந்தியா அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கும்.

ஸ்ரேயாஸ் ஐயர்

நூறு என்னும் மைல்கல்லினை நெருங்கும்போது சில முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்லோ ஆவதை சைமன் டவுல் சுட்டிக்காட்டியிருந்தார். அவர் கூறியிருந்ததைப் போல் Selfless, Fearless கிரிக்கெட் ஆடத்தயங்குவது சமயத்தில் அணிக்கான அச்சுறுத்தலே. ஏனெனில் இது போன்ற பெரிய மேடைகளில் இவை ரெண்டுமே அடிப்படை கூறுகள் என்பதனை ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பலமுறை நிரூபித்திருக்கின்றன

கடைசி 21 ஒருநாள் தொடர்களில் 15-ல் இந்தியா வென்றிருப்பினும் தோற்றது யாருடன் எனப் பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய நாடுகளுடன் தான். எனவே அவர்களுக்கேற்றாற் போல திட்டங்களை வகுக்கவேண்டும். மல்டிநேஷனல் தொடர்களிலும் நாக்அவுட்களிலும் தடுமாறுவதற்கும் முடிவு கட்டவேண்டும் என பல சவால்களும் இந்தியா முன் இருக்கின்றன.

ரவிச்சந்திரன் அஷ்வின்

அஷ்வின் "இது என்னுடைய கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்", என்று கூறியிருந்தார். அவருக்கு மட்டுமல்ல இன்னமும் சில வீரர்களுக்குக்கூட லிமிடெட் ஃபார்மட்டில் இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். எனவே வென்றே ஆகவேண்டுமென்ற தாகமும் வேட்கையும் அவர்களிடம் அதிகமாகவே காணப்படும்.

`Hitch Your Wagon To Star' என சொல்லப்படுவது போல் இம்முறை உலகக்கோப்பை மீது மட்டுமே கண்வைத்து அம்பை எய்கிறது இந்தியா.

கனவுக்கோப்பை கைசேரும் என எதிர்பார்ப்போம்.....

இந்தியாவின் உலகக்கோப்பை திட்டமிடல் குறித்த உங்கள் கமென்ட்டை பதிவிடுங்கள்!



from Latest news https://ift.tt/xcqREMG

Post a Comment

0 Comments