SAvSL: `புல் ஆக்ஷன் பிளாக்!' - மூன்று பேர் சதம்; 428 ரன்கள்; தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இலங்கை!

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதியது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வரலாற்றில் புதியதொரு சாதனையை படைத்து அசத்தியுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கும், கேப்டன் பவுமாவும் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். பெரும் நிலப்பரப்பை விழுங்கக்கூடிய ஒரு சுனாமி உருவாகும் முன்னர், கடல் எப்படி நிசப்தமாக இருக்குமோ அதே நிலையில் தான் தென்னாபிரிக்க அணியும் இருந்தது. இரண்டு பௌண்டரிகளை அடித்து கணக்கைத் துவக்கிய இரண்டாவது ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. தில்சன் மதுஷன்கா வீசிய 2 வது ஓவரில், பவுமா அவுட்டானர். இந்த விக்கெட்டின் போது மட்டுமே இலங்கை அணியினரிடம் ஆர்ப்பரிப்பை பார்க்க முடிந்தது. அடுத்த 50 ஓவர்கள் வரை "அமைதியோ அமைதி" தான். அடுத்து வந்திறங்கினார், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.

இலங்கை vs தென்னாப்பிரிக்கா

டி காக்குடன் ஜோடி சேர்ந்து இவர் ஆடிய இன்னிங்ஸ் அனைவரையும் மிரள வைத்தது. முதல் 10 ஓவர்களில் வெறும் 48 ரன்கள் தான். "ஒரு சுறாக்கூட்டம் வெறியில வெய்ட்டிங் ஃபார் கலவரம்" என்பது தான், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் ஆர்டர். அடுத்த பவர் பிளே ஓவர்களில் அப்படியே தலைகீழாக ஆட்டம் மாறத் தொடங்கியது. முதல் 25 ஓவர்கள் வரை சிங்கிள், இரண்டு என இந்த ஜோடி அமைதி ஜோதியாக ஆடிவந்தது. ரன்கள் வராதது போன்று இருந்தாலும் டி காக் அரைசதத்தை கடந்து விட்டார். அடுத்து சதத்தை நோக்கிய பாய்ச்சலில் பவுண்டரி, சிக்ஸர் என ஆடத் தொடங்கினார். 30வது ஓவரில் அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களாக இருந்தது. அதிரடியாக ஆடிய இவரின் ஆட்டம் சதத்தைத் தொட்டது. 84 பந்துகளில் சதமடித்து விட்டு, பதிரனா வீசிய 32வது ஓவரில் அவுட் ஆனார்.

இதற்கிடையில், மறுமுனையில் ஆடிவந்த ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸனும் சதத்தை நோக்கி அடியெடுத்து வைத்தார். இலங்கை அணியின் பௌலிங்கில் பெரும் சொதப்பல்கள். மற்றவர்களின் ஸ்பெல்லை ஒப்பிடும்போது தசுன் ஷனகா, துனித் வெல்லலாகே மட்டும் ஓரளவு வீசியிருந்தனர். அடுத்துக் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் ஆடிய ஆட்டத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. இவரால்தான் அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இதற்கிடையில் 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்த டஸ்ஸன், துனித் வெல்லலாகே ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இலங்கை vs தென்னாப்பிரிக்கா

ஏற்கனவே டி காக் மற்றும் டஸ்ஸன் இருவரும் சதம் அடித்து விட்டுச் சென்ற நிலையில், "நான் மட்டும் என்ன சும்மா போகுறதா?" என்பது போல் எய்டன் மார்க்ரமும் பேட்டைச் சுழற்றினார். 41வது ஓவரில், மூன்று விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை எடுத்திருந்தது, தென்னாப்பிரிக்கா அணி. அடுத்து வந்த 9 ஓவர்களில் டி20 இன்னிங்ஸில் கூட இப்படியொரு ஆட்டத்தை பார்த்திருக்க முடியாது. 34 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த மார்க்ரம், சதம் அடிக்க இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த சில பந்துகளிலேயே சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி சதத்தை அடித்தார். இவருக்கு இணையாக, ஹென்ரிச் கிளாசனும் மூன்று சிக்ஸர்களை அடித்து விட்டு 44வது ஓவரில் அவுட்டானார்.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதத்தை அடித்த மார்க்ரம், 106 ரன்களுடன் 48வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அடுத்து "கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்!" என என்ட்ரி கொடுத்த மில்லரும், 2 சிக்ஸர் 3 பவுண்டரி அடித்தார். இறுதியாக, 50 ஓவர்கள் முடிவில் 428 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்க அணி.

ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணியின் கட்டுத்தறி காளையாக விளையாடி வந்த பதிரனா, சர்வதேச போட்டிகளில் கன்றுக்குட்டியாக மாறிவிட்டார். இவரின் பௌலிங்கில் மட்டும் 95 ரன்கள் வந்தது. 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பௌலர் என்ற மோசமான சாதனையை படைத்தார், பதிரனா.

இலங்கை vs தென்னாப்பிரிக்கா

இந்த, இமாலயே இலக்கை எட்டிப் பிடிப்பது என்பது 90 சதவிகிதம் நிறைவேறாத காரியம் தான். ஆனாலும், அதை துளியளவாவது முயற்சித்துப் பார்த்த இலங்கை அணிக்கு பாராட்டியே ஆக வேண்டும். நிஸ்ஸன்கா மற்றும் குசல் பெரரா இருவரும் இலங்கை அணிக்கு ஓப்பனிங்கைத் தந்தனர். இரண்டாவது ஒவரின் முதல் பந்திலேயே நிஸ்ஸன்கா அவுட் ஆனார். இரண்டு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 3 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்து வந்த மெண்டிஸ் தன்னுடைய அதிரடியைக் காட்டினார். கண்கட்டி வித்தையாக 25 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 7 ஓவர்கள் முடிவில் 58 ரன்களை எடுத்து அசத்தியது, இலங்கை. அடுத்த 8வது ஓவரில் விக்கெட் விழுந்தது. இலங்கை அணியின் இரு ஓப்பனர்களின் விக்கெட்டையும் எடுத்தார், மார்கோ ஜான்சன்.

தென்னாபிரிக்க அணியில் மூன்று பேர் சிறப்பாக விளையாடியதைப் போல, இலங்கை அணியிலும் அதேமாதிரி மூன்று பேர். 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என வெளுத்து வாங்கிய மென்டிஸ் அவுட்டானது தான் பேரதிர்ச்சி. இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா மற்றும் அசலங்கா இருவரும் அதே மாதிரியான அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கினர். ஆனால், தென்னாப்பிரிக்க பௌலர்களின் குறியில் இருந்து இவர்களும் தப்ப முடியவில்லை. 14வது ஓவரில் சமரவிக்ரமா, 23 ரன்களுடன் அவுட்டானார். 15 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டு இழப்பிற்கு 120 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, அசலங்கா மற்றும் தசுன் ஷானகா இருவரையும் தவிர.

இலங்கை vs தென்னாப்பிரிக்கா

20.1வது ஓவரின் போது, இலங்கை அணிக்கு ஐந்தாவது விக்கெட் விழுந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 150 ரன்களாக இருந்தது. இதற்குப் பிறகும், அணியில் தரமான பார்ட்னர்ஷிப் உருவாகியிருந்தது. அசலங்காவும் ஷானகாவும் இணைந்து பெரிய பெரிய ஷாட்களை அடித்து வந்தனர். இயன்ற வரை அதிரடியான இன்னிங்ஸை ஆடிவந்த இவர்களின் ஆட்டம் 32வது ஓவரில் முடிவுக்கு வந்தது. மனம் தளராமல் ஆடிய அசலங்கா 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதற்கடுத்து தனியாக சண்டை செய்து வந்த ஷானகாவும் அவுட்டான பிறகு ஆட்டம் முடிவுக்கு வந்தது. தசுன் ஷானகா 68 ரன்கள் எடுத்திருந்தார். முன்பே சொன்னதைப் போல இலங்கை அணியிலும் மென்டிஸ், அசலங்கா, ஷானகா என மூன்று பேரும் சிறப்பாக செயல்பட்டனர். இதற்குப் பிறகு, ஆட்டம் ஊசலாடிக் கொண்டிருந்தாலும் 45 ஓவர்கள் வரை நீடித்தது. இறுதியாக 44.5 ஓவர்கள் முடிவில் 326 ரன்கள் எடுத்த இலங்கை அணி, ஆல்- அவுட் ஆனது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.


from Latest news https://ift.tt/RiISjvl

Post a Comment

0 Comments