பல தொழில்நுட்ப கருவிகள் முன்கூட்டியே நோய் அறிதலை எளிமைப்படுத்தியுள்ளன. இப்படி முன்கூட்டியே நோய்களைக் கண்டறியும் பட்சத்தில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரச்னையின் தீவிரம் குறைக்கப்படும். அந்தவகையில் கறவை மாடுகளுக்கு உண்டாகும் மடிநோய் பாதிப்பை அறிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்துடன் சிமெர்டெக் என்ற நிறுவனம் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது. பொதுவாகவே நுண்ணுயிரிகள், பூஞ்சை மற்றும் காளானில் உள்ள கிருமிகள் மூலமாகக் கறவை மாடுகளுக்கு மடிநோய் உண்டாகிறது.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் கறவை மாடுகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட பின்னரே நம்மால் அறிய முடியும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மடி வீக்கமடையும், சூடாக இருக்கும், காம்பு வீங்கி காணப்படும். அதோடு பாலின் நிறம் மற்றும் தரத்திலும் மாற்றம் உண்டாகும். பிரச்னை தீவிரமடையும் சமயங்களில் குணப்படுத்த முடியாத நிலையும் உண்டாகலாம்.
இம்மாடுகளின் பால் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்த பின்னரே கறவை மாடு, மடி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள். அதனால் மாடுகள் இருக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு.
இந்த நிலையில் ஆரம்ப நிலையிலேயே மடிநோயைக் கண்டறிவதற்கான இக்கருவி பால் மாடு வளர்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மாடு வளர்ப்பவர்களே இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். தங்களது வீடுகள் மற்றும் பண்ணைகளிலேயே பால் கறக்கும்போது கருவியைக் கொண்டு பரிசோதித்து அறிந்து கொள்ளலாம். பணமும் மிச்சமாகும், பால் வளமும் பெருகும்.
இந்தக் கருவி தேவைப்படும் நபர்கள் viftanuvas@gmail.com என்ற இ-மெயில் வழியாகவும் 044 2555 2377 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Latest news https://ift.tt/HG0ZTCS
0 Comments