ஒரு நிறுவனத்துக்கு அதன் முத்திரை… அதாவது லோகோதான் அந்தக் கம்பெனியின் பாரம்பரியத்தைச் சொல்லும். சிலருக்கு பைக்கின் ஸ்டைல், பெர்ஃபாமன்ஸைவிட அந்த நிறுவனத்தின் லோகோவைப் பார்த்தாலே ஒரு கிக் ஏறும். அதில் ராயல் என்ஃபீல்டுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரெட்ரோ, க்ளாஸிக் பைக் புல்லட்களைத் தயாரித்துவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது நிறுவனத்தின் லோகோவை மாற்றப் போகிறது என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கார் நிறுவனத்தில் மஹிந்திரா நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்புதான் தனது பழைய லோகோவை மாற்றிவிட்டு, இரட்டைக் கோபுரங்கள் கொண்ட ஒரு லோகோவை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த வகையில் பைக் நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது லோகோவை மாற்றப் போகிறது. அதற்காக 2 லோகோக்களுக்கு அது காப்புரிமை பெற்றிருக்கிறதாம். இது குறித்த ஆவணங்கள் (Logo Trademark Application) வாயிலாக இன்டர்நெட்டில் வலம் வருகின்றன.
ஒரு லோகோ, Royal Enfield என்கிற எழுத்துகள் அப்படியே ஆங்கிலத்தில் Cursive ஸ்டைலில் கையெழுத்துப் போடுவதுபோல் இருக்கிறது. இன்னொன்று, பள்ளிக் காலத்தில் ஸ்கவுட், என்சிசி போன்ற இயக்கங்களுக்கு ஒரு பேட்ஜ் கொடுப்பார்களே… அந்த ஸ்டைலில் இருக்கிறது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வரும் காலத்திலிருந்து இந்த லோகோவைப் பயன்படுத்தி வருகிறது இந்நிறுவனம். ராயல் என்ஃபீல்டு என்கிற பெயருக்கு மேலே ஒரு க்ரீடம் இருக்கிறது இதில்.
இந்த இரண்டில் ராயல் என்ஃபீல்டு எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், இந்த லோகோ ஒன்றும் புதுசு என்று சொல்லிவிட முடியாது. சில பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சமீபமாக ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் தெரியும்; க்ளாஸிக் 350 மற்றும் இன்டர்செப்டர் 650 போன்ற பைக்குகளுக்கு இந்த இரண்டாவது லோகோவையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பயன்படுத்தி இருக்கிறது.
இருந்தாலும், இந்த லோகோவை சமீபமாக ட்ரேட்மார்க் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. படத்தில் இருப்பதுபோல், இந்த லோகோவுக்கான அப்ளிகேஷன் தினம் ஜூன் 5-ம் தேதி என்றுதான் பதிவிடப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே சொன்னதுபோல், இந்த 2024-ல் க்ளாஸிக் 650, க்ளாஸிக் 350 பாபர், ஸ்க்ராம் 650 என மொத்தம் 6 மோட்டார் சைக்கிள்களைக் களமிறக்கப் போகிறது RE. ராயல் என்ஃபீல்டில் இருந்து அடுத்த பைக்காக கொரில்லா (Guerrilla) என்றொரு ரெட்ரோ க்ளாஸிக் பைக்தான் முதலில் வெளிவரும் என்கிறார்கள். இதற்கான டெஸ்ட் டிரைவ்தான் இப்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கொரில்லா பைக்கில் இந்தப் புது லோகோதான் இடம் பெறும் என்கிறார்கள்.
லோகோவை விடுங்க... கொஞ்சம் பராமரிப்புச் செலவையும் குறைங்களேன் ராயல் என்ஃபீல்டு!
from Vikatan Latest news https://ift.tt/IwfLg81
0 Comments