ஜெயலலிதா மரணம்:``விசாரணை அறிக்கையில் சில பிரச்னைகள் இருக்கு; நடவடிக்கை நிச்சயம்" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம், கடந்த வாரம் இதுதொடர்பான 600 விசாரணை அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி, ``இதை வெளியிடலாமா என்று அரசாங்கம்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை வெளியிடுவது குறித்து கோவையில் பேசியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், நீதிபதி ஆறுமுகசாமி

கோவை திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும், திமுக மாநில இளைஞரணி துணை செயலாளருமான பைந்தமிழ்பாரி - கீதா தம்பதி மகள் ஸ்ரீநிதிக்கும், பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ மதியழகன் - விஜயா தம்பதி மகன் கெளசிக் தேவ் ஆகியோரின் திருமணம் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என உங்களை ஏமாற்ற மாட்டோம். தேர்தல் அறிக்கையில் கூறியவையில், 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 30% விரைவில் நிறைவேற்றுவோம். தேர்தலுக்கு முன்பு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை நான் நடத்தினேன். அப்போது பெறப்பட்ட மனுக்களில் 70% தீர்வு காணப்பட்டுள்ளன. 234 சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களின் பிரச்னைகளை முதல்வர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதற்கு தீர்வு காணப்படும் என உறுதிமொழி அளித்துள்ளோம். எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதுதான் திமுக. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கட்சியினரே கூறினர். அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆவியோடு பேசுகிறேன் என்று அமர்ந்து தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரே கூறினார்.

இதனால் அப்போது ஒப்புக்காக ஓர் விசாரணை கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த கமிஷனும் அப்போது ஒப்புக்காகவே செயல்பட்டு வந்தது. 'திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த கமிஷனை முறையாக நடத்துவோம்.' என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம். கடந்த 5 நாள்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி அந்த அறிக்கையை அரசுக்கு சமர்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதைத் தற்போது சொல்ல மாட்டோம். அந்த பிரச்னையை சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமும் கடந்த ஆட்சியில் தான் நடந்தது. அன்றைய முதல்வர் அதனை தொலைக்காட்சியில் பார்த்தது தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். அந்த அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்தித் தலைவர் குற்றம் சாட்டி வருகிறார். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதுமே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. மாணவிகளுக்கு உதவித் தொகை போன்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 'பெண்களுக்கான உரிமைத் தொகை எப்போது தருவீர்கள்.' என கேட்கின்றனர். அரசின் நிதிப் பிரச்னை சரி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படும். நான் கலைஞரின் மகன். சொன்னதை செய்வேன்." என்றார்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/8a6TS2m

Post a Comment

0 Comments