மதுரை: பசுமாட்டின் வயிற்றிலிருந்து 65 கிலோ பிளாஸ்டிக்...!

பசுமாட்டின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 65 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வடக்குமாசி வீதியில் வசிக்கும் பரமேஸ்வரன் மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வளர்த்து வரும் பசுமாடு இரண்டு மாதங்களுக்கு முன் கன்று ஈன்ற நிலையில் சரியாக சாப்பிடாமல் சாணம், சிறுநீர் கழிக்காமல் அவதிப்பட்டு வந்தது.

அறுவை சிகிச்சையின்போது

இதனால் பதறிப்போன பரமேஸ்வரன் சில நாட்களுக்கு முன் தல்லாகுளத்திலிருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு பசுமாட்டை கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோதுதான் அதன் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. அதன் பின்பு அறுவை சிகிச்சை செய்து 65 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர். ஒருவாரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போது பசு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கால்நடை தலைமை மருத்துவர் வைரவசாமி, உதவி மருத்துவர்கள் முத்துராம், விஜயகுமார், முத்துராமன், அறிவழகன் ஆகியோருடன் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உதவியுடன் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். பசுமாடு காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு இந்த நிலைமை ஏற்பட்டதை நினைக்கும் போது அதிர்ச்சியும் வேதனையும் உண்டாகிறது.

அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவு

கால்நடை தலைமை மருத்துவர் வைரவசாமியிடம் இதுகுறித்து பேசினோம்.

கால்நடைகள், தனக்கு ஏற்ற உணவை இனம் காணத் தெரியாதா?

இவ்வளவு பிளாஸ்டிக்கை மாடு உட்கொள்ள என்ன காரணம்?

எப்படி கண்டுபிடித்தீர்கள்?

என்று பொதுவான சில சந்தேகங்களையும் அதற்கு என்ன தீர்வு என்பதையும் கேட்டோம்.

வயிற்றுக்குள் பிளாஸ்டிக் குவியல்...

இதுகுறித்து கால்நடை தலைமை மருத்துவர் வைரவசாமி கூறுகையில், "சில மாதங்களுக்கு முன் இந்த பசு கன்று ஈன்றுள்ளது. அதன் பின்பும் வயிறு பெரிதாகவே இருந்துள்ளது. மாட்டு உரிமையாளருக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பின்பு தீவனம் உட்கொள்ளாமல், சாணம், சிறுநீர் கழிக்க சிரமப்பட்டுள்ளதை பார்த்து இங்கு அழைத்து வந்தார்கள். வழக்கமான சோதனைகளை செய்தோம்.

மருத்துவர் வைரவசாமி

அப்போது வயிற்றில் ஜீரணமாகாமல் ஏதோ இருப்பதை அறிய முடிந்தது. அதன் பின்பு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பது தெரிந்தது. எப்படியாவது என் மாட்டை காப்பாற்றுங்கள் என்று உரிமையாளர் கூறினார். அதோடுதான் வயிற்றில் இருக்கும் பிளாஸ்டிக்கை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து 3 நாட்கள் அதற்கு குளுகோஸ் மட்டும் அருந்த கொடுத்து கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து பிளாஸ்டிக் கழிவுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் எடுத்தோம். எடுக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளை பார்த்து எங்களுக்கே அதிர்ச்சிதான். அதன் பின்பு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து இப்போது பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.

என்ன செய்ய வேண்டும்?

நாம் சின்ன துணிப்பைகளை கூட கடைக்கு எடுத்துச் செல்வதில்லை, தங்களது வாகனங்களில் எப்போதும் சின்ன துணிப்பைகளை வைத்துக் கொள்ளவது நல்லது. இது பிளாஸ்டிக் பயன்பாட்டை தேவையான சமயத்தில் தவிர்க்கும்.

நம் மக்கள் உணவுகளை கடையிலிருந்து வாங்கும்போது அதிகமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார்கள். ஒரு தோசை வாங்கினால்கூட அதில் ஒரு பிளாஸ்டிக் பேப்பர், சட்னி சாம்பாருக்கென்று பிளாஸ்டிக் கவர்கள் தனித்தனியாக தருகிறார்கள். மாடு உள்ளிட்ட கால்நடைகள் பசிக்காகத்தான் உணவைத் தேடுகிறது. இப்படி வாங்கிய காலி பிளாஸ்டிக் கவர்களை குப்பைத்தொட்டியில் தெருவில் போடும்போது, அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவு வாசனையால் ஈர்க்கப்பட்டு அந்த பிளாஸ்டிக்குகளை மாடுகள் உட்கொள்கிறது. வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே தேங்கி இருந்து பின்பு மாடுகளுக்கு வேதனையை அளிக்கிறது.

பிளாஸ்டிக் பை

பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். குறிப்பாக அதில் உணவு உட்கொண்டு தெருவில் வீசுவதையும் தவிர்க்க வேண்டும். மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை. எதை சாப்பிட்டோம், என்ன செய்கிறது என்பதை வெளியே சொல்ல முடியாத கால்நடைகளை துன்புறுத்த நாம் காரணமாகி விடக்கூடாது.

அடுத்து, மாடு வளர்ப்பவர்கள் அவைகளை சாலைகளில் மேய விடக்கூடாது. முடிந்தவரை தங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொண்டு தீவனங்களை கொடுக்க வேண்டும். இனிமேலாவது உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக் பைகளை குப்பையில் போடுபவர்கள் கால்நடைகள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JtCDW2N

Post a Comment

0 Comments