உக்ரைன்: '2 பில்லியன் டாலருக்கு ராணுவ உதவி செய்யும் அமெரிக்கா?' - ஓராண்டை நெருங்கும் போரில் பரபரப்பு

1949-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளால் 'நேட்டோ' படையானது உருவாக்கப்பட்டது. பின்னாளில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து க்ரீஸ், துருக்கி, ஃபெடரல் குடியரசு போன்ற நாடுகள் 'நேட்டோ'வுடன் இணைந்தன. அந்தவகையில் உக்ரைனும் 'நேட்டோ' அமைப்பில் இணைவதற்கு முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் உக்ரைன் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

ரஷ்யா - புதின்

இதனால் ஆத்திரமைடைந்த ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. போர் தொடங்கி ஒராண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வளவு முயற்சி செய்தும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கிவருகின்றன. குறிப்பாக அமெரிக்கா அதிக உதவிகளைச் செய்துவருகிறது. இதனால், உக்ரைனும் கடுமையாக எதிர்வினையாற்றிவருகிறது. இதனால் ரஷ்யாவுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

2 பில்லியன் டாலர்:

இதற்கிடையில் கடந்த வாரம் பேசிய உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர், "நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும்" என்று தெரிவித்திருந்தார். இது ரஷ்யா அதிபர் புதினை மேலும் கோபமடையச் செய்தது. இதையடுத்து தாக்குதலை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் 'ரஷ்யா - பெலாரஸ்' இணைந்து கூட்டு போர் பயிற்சியைத் தொடங்கியது. உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனிய நகரமான கிராமடோர்ஸ்கில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தை ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய அதிபர் புதின்

முன்னதாக உக்ரைனின் துணைப் பாதுகாப்பு அமைச்சர், "நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு ரஷ்யாவிடம் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவி செய்ய அமெரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள், "உக்ரைனுக்கான 2 பில்லியன் டாலர் ராணுவ உதவியில் போயிங் வடிவமைத்த புதிய ஆயுதமான Ground Launched Small Diameter Bombs (GLSDB) முதன்முறையாக இடம்பெறுகிறது.

"மோதலை மேலும் அதிகரிக்கும்..."

இது 150 கிமீ (90 மைல்கள்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் தன்மை கொண்டது. முன்னதாக வழங்கப்பட்ட HIMARS அமைப்புகளால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளின் 80 கிமீ வரம்பு வரை மட்டுமே தாக்க முடியும். இது உக்ரைனின் நிலப்பரப்பில் இருக்கும் ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும், குறிப்பாக ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட கிரிமியா தீபகற்பத்தின் சில பகுதிகளையும் உக்ரைனால் மீட்க முடியும்.

அமெரிக்க வெள்ளை மாளிகை

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், "நீண்ட தூரத்தில் இருக்கும் இலக்குகளை எளிதில் தாக்கும் தன்மை கொண்ட அமெரிக்க ஆயுதங்களின் வருகை மோதலை மேலும் அதிகரிக்கும். மேற்கத்திய நாடுகள் கடந்த வாரம் முதன்முறையாக பல மேம்பட்ட முக்கிய போர் டாங்கிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். இந்த ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் திறன் கொண்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பது இதில் ஒரு முன்னேற்றத்தை காட்டுகிறது.

முன்னேறும் ரஷ்யா:

ஆனால் புதிய ஆயுதங்கள் வருவதற்கு இன்னும் சில காலம் ஆகும். இதற்கிடையில் ரஷ்யா போர்க்களத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய இலக்கான பாக்முட் நகரின் வடக்கு மற்றும் தெற்கில் தாங்கள் முன்னேற்றம் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் அந்த கூற்றுகளில் பலவற்றை மறுக்கிறது. சண்டை நடக்கும் இடங்கள் அதிகரித்து வருவதை பார்க்கும் போது ரஷ்ய, இந்த போரில் முன்னேற்றங்களை கண்டு வருவதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன" என்றனர்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் உக்ரைனின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், "ரஷ்யப் படைகள் முக்கிய நகரமான லைமனுக்கு அருகே தரையிறங்க முயற்சித்து வருகிறது. பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், பக்முட் மற்றும் அவ்திவ்காவுக்கு அருகில் தாக்குதலை முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

தொடர்ந்து அவர், "பாக்முட்டின் தெற்கே, ரஷ்யாவும் இந்த வாரம் ஒரு பெரிய புதிய தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இது தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நீண்டகாலமாக உக்ரைனிய கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையாகும். அதன் படைகள் இதுவரை அங்கு தங்கியிருக்கிறது" என்றார்.

இதற்கிடையில் ரஷ்யாவை எதிர்க்க போர் விமானங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/czdRZEF

Post a Comment

0 Comments